Published : 06 Feb 2025 02:59 PM
Last Updated : 06 Feb 2025 02:59 PM

“சிவகங்கை பெண் காவல் ஆய்வாளரை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை” - தினகரன்

டிடிவி தினகரன் | கோப்புப்படம்

சென்னை: “சிவகங்கையில் காவல் நிலையத்துக்குள் புகுந்து பெண் காவல் ஆய்வாளரை தாக்கிய விசிக நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “சிவகங்கை மாவட்டம் சோமநாதபுரம் காவல் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்த விசிகவைச் சேர்ந்த சிலர், அங்கிருந்த பெண் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. காவல் நிலையத்துக்குள் புகுந்து பணியிலிருக்கும் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் மீது நடைபெற்றிருக்கும் இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு காவல் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கி வரும் பணியில் ஈடுபட்டுள்ள தன் மகளுக்கு காவல் நிலையத்திலேயே பாதுகாப்பில்லை எனக் கூறி கதறி அழும் பாதிக்கப்பட்ட பெண் காவல் உதவி ஆய்வாளரின் தாய்க்கு காவல் துறை என்ன பதில் சொல்லப் போகிறது? தன்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக பெண் காவல் உயர் அதிகாரி ஒருவர் அளித்த புகார் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே காவல் நிலையத்துக்குள் பெண் காவல் ஆய்வாளர் மீது நடைபெற்றிருக்கும் தாக்குதல் சம்பவம் தமிழக காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு துளியளவும் பாதுகாப்பில்லை என்பதையே தெளிவுபடுத்துகிறது.

எனவே, சிவகங்கையில் காவல் நிலையத்துக்குள் புகுந்து பெண் காவல் ஆய்வாளரை தாக்கிய விசிக நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மக்களை காக்கும் நோக்கில் காவல் துறையை தேர்ந்தெடுத்து பணியாற்றி வரும் பெண் காவலர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x