Published : 06 Feb 2025 03:01 PM
Last Updated : 06 Feb 2025 03:01 PM
சென்னை: ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் பயிர்க்கடனை தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை வஞ்சிப்பதா? என தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2021-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த உடன், முதல் கையெழுத்து விவசாயக் கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி கொடுத்தார். திமுக தேர்தல் அறிக்கையிலும், வாக்குறுதி எண் 33 ஆக, சிறு, குறு விவசாயிகளின் பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், நான்கு ஆண்டுகள் கடந்தும், இன்று வரை, பயிர்க் கடனை ரத்து செய்யாமல், எளிய விவசாயிகளுக்குத் துரோகம் செய்து கொண்டிருக்கிறது திமுக.
கடந்த ஆண்டு, விவசாயிகள் மத்தியில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தமிழக அரசிடம் நிதி இல்லை. சிறு, குறு விவசாயிகளின் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது என்றும், வாங்கிய கடனை விவசாயிகள் குறித்த காலத்தில் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் ஆணவமாகப் பேசினார். இத்தனைக்கும், கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போதே, பயிர்க் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று திமுக கூறியிருந்தது. பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து சிறு, குறு விவசாயிகளை வஞ்சிப்பதுதான் திமுகவின் நோக்கமா?
திமுக அரசின் சாதனையாக, ஆட்சிக்கு வந்து, கடந்த 07.05.2021 முதல், 31.12.2023 வரை, ரூ.35,852.48 கோடி கூட்டுறவு பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் கூறுகிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில், புயல், வெள்ளம் என, சிறு குறு விவசாயிகள் எதிர்கொண்ட பிரச்சினைகள் ஏராளம். அப்படி இருந்தும், கடந்த 31.03.2024 வரை நிலுவையில் இருக்கும் கூட்டுறவு பயிர்க் கடன் ரூ.19,008 கோடி மட்டும்தான் எனில், இத்தனை கடினமான காலங்களிலும், சிறு குறு விவசாயிகள் தங்கள் கடனை முறையாகத் திரும்பச் செலுத்தி வருகிறார்கள் என்பதுதானே பொருள். திமுகவின் வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது திமுக.
பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்வோம் என்ற வாக்குறுதியை, நான்கு ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றாமல், விவசாயிகளை வஞ்சிப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. உடனடியாக, இதற்காக ஒரு குழு அமைத்து, சிறு குறு விவசாயிகளின் பயிர்க்கடன்களை ரத்து செய்வதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும். திமுகவின், கல்விக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை நம்பி, நான்கு ஆண்டுகளாக ஏமாந்து கொண்டிருக்கும் இளைஞர்களின் நிலை, சிறு, குறு விவசாயிகளுக்கும் தொடரக் கூடாது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...