Published : 06 Feb 2025 02:55 PM
Last Updated : 06 Feb 2025 02:55 PM
சென்னை: விருதுநகர் மாவட்டத்தில் ஏற்படும் தொடர் பட்டாசு விபத்துக்களை தடுத்திட தமிழக அரசு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், சின்னவாடி ஊராட்சி, தாதப்பட்டி கிராமத்தில் 05.02.2025 அன்று தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு பெண் தொழிலாளி ராமலெட்சுமி என்பவர் உயிரிழந்துள்ளதும், 6 பேர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் பெரும் வேதனையான சம்பவமாகும். இந்த விபத்தில் உயிரிழந்த பெண் தொழிலாளியின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.
விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இதில் தொழிலாளர்கள் உயிரிழப்பதும், படுகாயங்கள் ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது. பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிகள் கறாராக கடைபிடித்தால் இதுபோன்ற விபத்துகள் நடைபெறுவதை தடுக்க முடியும். ஆனால், அரசு நிர்வாகமும், ஆலை உரிமையாளர்களின் மெத்தனப்போக்கும் இதுபோன்ற விபத்துக்கள் நடப்பதற்கு முக்கியமான காரணமாக உள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்தை தடுப்பதற்கு அரசின் விதிமுறைகளை கறாராக கடைபிடிக்கப்படுவது, பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம் இருப்பது உள்ளிட்டவற்றை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 4 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகை போதுமானதல்ல. எனவே, பட்டாசு ஆலைகளில் உயிரிழக்கும் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி ஆலை நிர்வாகம் ரூ. 10 லட்சமும், அரசு நிர்வாகம் ரூ. 20 லட்சமும் நிவாரணம் வழங்கிட வேண்டுமெனவும், படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருபவர்களுக்கு தரமான உயர்தர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை உடனடியாக அரசாணை வெளியிட்டு அமல்படுத்தப்பட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...