Published : 06 Feb 2025 01:04 PM
Last Updated : 06 Feb 2025 01:04 PM
சென்னை: திமுகவின் சமூக அநீதிக்கு எதிராக முழக்கமிட்ட பாமகவினரை கைது செய்வதா? மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் கடந்த ஒன்றாம் தேதி காலஞ்சென்ற ஜெ.குருவின் பிறந்தநாள் நிகழ்வுகளில் பங்கேற்க அமைச்சர் சிவசங்கர் சென்ற போது, திமுகவின் சமூக அநீதியைக் கண்டித்து முழக்கம் எழுப்பியதற்காக பாமகவைச் சேர்ந்த அன்புமணி, சிங்கார வேலு, சீனு ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திமுக அரசின் இந்த அடக்குமுறை கண்டிக்கத்தக்கது.
காடுவெட்டியில் கடந்த ஒன்றாம் தேதி நடந்த நிகழ்வில் திமுக அமைச்சர் சிவசங்கருக்கு எதிராக அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் முழக்கம் எழுப்பினார்கள். திமுக அரசில் தங்களுக்கு சமூக அநீதி இழைக்கப்படுவதாலும், அதற்கு சிவசங்கர் போன்றவர்கள் துணை போவதாலும் மக்களிடம் எழுந்த கொந்தளிப்பின் வெளிப்பாடு தான் அது. மக்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த அரசியலமைப்புச் சட்டம் அதிகாரம் வழங்கியிருக்கும் நிலையில், அதை மதிக்காமல் பாமக மீது வன்மமும், வெறுப்பும் கொண்டு இத்தகைய அடக்குமுறைகளை திமுக அரசு கட்டவிழ்த்து விடுவதை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
கைது செய்யப்பட்டிருக்கும் மூவரும் எந்தத் தவறும் செய்யவில்லை. ‘‘மருத்துவர் அய்யா வாழ்க, மாவீரன் வாழ்க, வன்னியர்களுக்கான 10.50% இட ஒதுக்கீடு என்ன ஆச்சு?’’ என்று தான் அவர்கள் முழக்கம் எழுப்பினார்கள். ஆனால், வன்னியர்களுக்கான 10.50% இட ஒதுக்கீடு என்ன ஆச்சு? என்று திமுக அரசின் சமூக அநீதியை சுட்டிக்காட்டி முழக்கம் எழுப்பியதைத் தாங்கிக் கொள்ள முடியாத அமைச்சர் சிவசங்கரின் தூண்டுதலில் அவருடன் வந்த சிலர் பாட்டாளி மக்கள் கட்சியினரைத் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, பாதிக்கப்பட்ட பாமகவினரை கைது செய்வது பெரும் அநீதியாகும்.
காலஞ்சென்ற காடுவெட்டி குரு வாழ்ந்த காலத்தில் அவருக்கு எதிராக திமுகவும், சிவசங்கரும் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினார்கள் என்பதை அரியலூர் மாவட்ட மக்கள் அறிவார்கள். ஜெ.குருவை படுகொலை செய்வதற்காக கூலிப்படைகளை ஏவினார்கள். ஜெ.குருவை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் உயிரிழந்த போது அவருக்கு இரங்கல் கூட தெரிவிக்காமல், அவரது மறைவை கொண்டாடி மகிழ்ந்தவர்கள் தான் சிவசங்கரும், திமுகவினரும். திமுகவினரால் மாவீரனுக்கு அச்சுறுத்த ஏற்பட்ட போதெல்லாம் அவரை பாதுகாத்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ். அப்படிப்பட்ட திமுகவினரும், சிவசங்கரும் ஜெ.குரு பிறந்தநாள் விழாவுக்கு வரும் போது, அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் பாட்டாளி மக்கள் கட்சியினர் முழக்கம் எழுப்பினார்கள். இதற்காக பாமகவினரை கைது செய்வதெல்லாம் தமிழ்நாடு இதுவரை கண்டிருக்காத அடக்குமுறையின் உச்சம் ஆகும்.
கைது செய்யப்பட்ட பாமகவினருக்கு எதிராக நேற்று காலை வரை எந்த புகார் மனுவும் அளிக்கப்படவில்லை. திடீரென நேற்று மதியத்திற்குப் பிறகு அவர்கள் மீது அவசர, அவசரமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் பாமகவினரைத் தாக்கிய திமுகவினர் மீது அளிக்கப்பட்ட புகார் மனு மீது இன்று வரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இது தான் காவல்துறையின் நடுநிலையா?
தமிழ்நாட்டின் தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்கள் ஏராளமாக உள்ளன. தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. கொலைகளும், கொள்ளைகளும் இல்லாத நாட்களே இல்லை என்றாகிவிட்டது. திரும்பிய திசையெல்லாம் கஞ்சாவும், போதைப் பொருட்களும் கட்டுப்பாடின்றி விற்பனையாகின்றன. சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வரும் பெண்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர், அரசு பள்ளிகளில் ஆசிரியர்களால் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்றனர். இவற்றைத் தடுக்கவும், பொதுமக்கள் அச்சமின்றி நடமாடவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்காத காவல்துறையினர், திமுகவினரின் கைப்பாவையாக மாறி பாமகவினரை பழிவாங்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது. காவல்துறை திமுகவின் ஏவல் துறையாக மாறிவிடக் கூடாது.
பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது இத்தகைய அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் பா.ம.க.வை முடக்கி விடலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைத்தால் அவருக்கு ஏமாற்றம் மட்டும் தான் பரிசாகக் கிடைக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். பா.ம.க.வினர் மீது தொடரப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடியாக திமுக அரசு திரும்பப் பெற வேண்டும். பாமகவினர் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதற்கும், பாமகவினர் மீது வன்மம் காட்டுவதற்கும் பதிலாக, தெலுங்கானாவில் நடத்தப்பட்டது போன்று தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநாட்டுவதில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு முழு கவனம் செலுத்த வேண்டும்.'' இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...