Published : 06 Feb 2025 12:41 PM
Last Updated : 06 Feb 2025 12:41 PM
சென்னை: காவலரை கொடூரமாக தாக்கிய ஆயுதப்படை காவலர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குற்றச்சாட்டுக்கு உள்ளான 3 போலீஸாரையும் பணி இடை நீக்கம் செய்து காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை கொண்டிதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் காவலர் ரங்கநாதன் (39). திருவல்லிக்கேணி காவல் நிலைய ரோந்து வாகன ஓட்டுநராக பணி செய்து வருகிறார். இவர் ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றியபோது காவலர்கள் மதுரை ஆனந்த் (33), சென்னை புதுப்பேட்டை சுந்தரராஜன் (38), திண்டுக்கல் நிலக்கோட்டையைச் சேர்ந்த மணிபாபு (30) ஆகியோருடன் நட்புடன் இருந்துள்ளார். இவர்கள் 4 பேரும் 10 ஆண்டுகளாக ஒன்றாக பணி செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நண்பர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் எழும்பூரில் ஒன்றாக சந்தித்துள்ளனர். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ரங்கநாதனை சக காவலர்களான நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில், அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து எழும்பூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆனந்த், மணிபாபு, சுந்தர்ராஜன் ஆகிய மூன்று பேரையும் பிடித்து விசாரித்தனர்.
தாக்குதல் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ரங்கநாதன், சக காவலர் நண்பர்களான 3 பேரிடமும் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்துக்கு பணி மாறுதலில் செல்ல உதவி கேட்டுள்ளார். அதற்கு ஆயுதப்படை காவலரான சுந்தர்ராஜன், தான் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பணி பெற்றுத் தருவதாக கூறி உள்ளார். இதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை தர வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது, ஆனந்த் மற்றும் மணிபாபு உடனிருந்துள்ளனர்.
இந்நிலையில், 2 மாதங்களுக்கு முன்னர் சொன்னபடி ரங்கநாதனுக்கு பணி இடமாறுதல் கிடைத்துள்ளது. ஆனால், பாதி பணத்தை மட்டுமே கொடுத்து மீதம் உள்ள பணத்தை கொடுக்கவில்லையாம். இது தொடர்பான பிரச்சினை காரணமாகவே நண்பர்களான காவலர்கள், ரங்கநாதனை தாக்கி உள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட 3 போலீஸாரும் கைது செய்யப்பட்டனர். மேலும், 3 போலீஸாரையும் பணி இடை நீக்கம் செய்து காவல் ஆணையர் அருண் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...