Published : 06 Feb 2025 06:15 AM
Last Updated : 06 Feb 2025 06:15 AM
சென்னை: தொழிலாளர்களை பாதுகாக்க புலம்பெயர் நாடுகள் உதவ வேண்டும் என்று ஐநா மன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்.குமார் வலியுறுத்தியுள்ளார்.
புலம்பெயர்வு குறித்த ஐநா மன்றத்தின் சர்வதேச ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கலந்தாய்வுக் கூட்டம் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் கடந்த பிப்.3-ம் தேதி தொடங்கியது. இன்று வரை நடைபெறும் அந்த கூட்டத்தில் கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத் தலைவர் பொன்.குமார் பங்கேற்று பேசியதாவது:
தொழிலாளர்கள் தரமான வேலை, நல்ல சம்பளம் என்ற நோக்கோடு பல்வேறு நாடுகளுக்கு பல ஆண்டுகளாக புலம்பெயர்ந்து சென்று வருகின்றனர். கட்டுமானத் தொழிலாளர் உள்ளிட்ட அமைப்புசாராத் தொழிலாளர்கள் முகவர்களால் ஏமாற்றப்பட்டு, அயல்நாடுகளுக்கு சென்ற பின் சொல்லப்பட்ட வேலையோ, உறுதியளிக்கப்பட்ட சம்பளமோ கிடைக்காமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இவர்களை பாதுகாக்க தமிழக அரசு அயலகத் தமிழருக்கு என ஒரு தனித் துறையை உருவாக்கியுள்ளது.
இதே போல தொழிலாளர்களை அனுப்பும் நாடுகளும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும் நாடுகளும் இப்படி புலம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கு ஒரு ஏற்பாட்டை செய்திட வேண்டும். தொழிலாளர்கள் அயல் நாடுகளுக்கு சென்று அந்த நாட்டின் வளர்ச்சிக்காக தன்னுடைய ரத்தத்தை வியர்வையாக சிந்துகின்றனர்.
உழைத்து அந்த நாட்டை மேம்படுத்துகின்றனர். எனவே அந்த நாட்டுக்கும் புலம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டிய கடமை உண்டு. தொழிலாளர்கள் பாதுகாப்பாகவும், முறையாகவும் அயல்நாடுகளுக்கு புலம்பெயர்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment