Published : 03 Feb 2025 02:49 AM
Last Updated : 03 Feb 2025 02:49 AM
சென்னை: தனித்துவம் வாய்ந்த வேளாண் விளைபொருட்களுக்கு சர்வதேச சந்தைகளில் நல்ல விலை கிடைக்க வசதியாக பண்ருட்டி பலாப்பழம், சாத்தூர் சம்பா மிளகாய், கொல்லிமலை மிளகு, திருநெல்வேலி சென்னா இலை உட்பட 34 வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.
புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடம் அல்லது ஒரு பகுதி, நகரம் அல்லது நாடு போன்றவற்றுடன் தொடர்புடைய தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கப்படும் அடையாளம் ஆகும். புவிசார் குறியீடு பெறும் பொருட்களுக்கு சர்வதேச சந்தையில் நல்ல விலை கிடைக்கும்.
அதன் அடிப்படையில் தமிழக வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் அண்மையில் 34 வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்று வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, பண்ருட்டி பலாப்பழம், முந்திரி, சாத்தூர் சம்பா மிளகாய், தூயமல்லி அரிசி, புளியங்குடி எலுமிச்சை, சேலம் கண்ணாடி கத்தரி, ராமநாதபுரம் சித்திரை கார் அரிசி, கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை, செட்டிக்குளம் சின்ன வெங்காயம், கிருஷ்ணகிரி அரசம்பட்டி தேங்காய், கிருஷ்ணகிரி பன்னீர்ரோஜா, தஞ்சாவூர் பேராவூரணி தேங்காய், மூலனூர் முருங்கை, சாத்தூர் வெள்ளரி, தஞ்சாவூர் வீரமாங்குடி அச்சு வெல்லம், தூத்துக்குடி - விளாத்திகுளம் மிளகாய், கடலூர் கோட்டிமுளை கத்தரி, மதுரை செங்கரும்பு, சிவகங்கை கருப்பு கவுனி அரிசி, கன்னியாகுமரி ஆண்டார்குளம் கத்தரி, விருதுநகர் அதலக்காய், திண்டிவனம் பனிப்பயறு, கரூர் சேங்கல் துவரை ஆகியவற்றுக்கும், ஜவ்வாது மலை சாமை, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் செவ்வாழை, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மிளகு, ராணிப்பேட்டை மாவட்டம் மீனம்பூர் சீரக சம்பா, திண்டுக்கல் மாவட்டம், ஜயம்பாளையம் நெட்டை தென்னை, தருமபுரி மாவட்டம் உரிகம்புளி, கடலூர் மாவட்டம் புவனகிரி மிதி பாகற்காய், கரூர், சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த செஞ்சோளம், திருநெல்வேலி சென்னா இலை, தேனி மாவட்டம், ஓடைப்பட்டி விதையில்லா திராட்சை, கரூர், திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களிலுள்ள செங்காந்தாள் கிழக்கு ஆகிய 34 வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து புவிசார் குறியீடு சட்டத்தில் பதிவு பெற்ற அட்டர்னியும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான சஞ்சய்காந்தி கூறும்போது, “தமிழகத்தில் விண்ணப்பிக்கப்பட்ட 145 பொருட்களில் கடந்தாண்டு டிசம்பர் வரை 59 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. தோவாளை மாணிக்கம் பூமாலை, கும்பகோணம் வெற்றிலை, சேலம் மாம்பழம், நாகை சீரக சம்பா அரிசி உள்ளிட்ட 10 பொருட்களுக்கு விரைவில் புவிசார் குறியீடு கிடைக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...