Published : 02 Feb 2025 06:49 PM
Last Updated : 02 Feb 2025 06:49 PM
விழுப்புரம்: மரக்காணத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்காமல் மரக்காணம் வருவாய் துறையினர் ஹெலிகாப்டரில் பறந்தார்களா என்ற விவகாரம் குறித்து வட்டாட்சியர் விளக்கமளித்துள்ளார்.
கடந்த 26-ம் தேதி குடியரசு தினத்தன்று மரக்காணம் தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தாசில்தார் பழனி தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இவ்விழாவில் வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர். ஆனால் இவ்விழாவில் கலந்துகொள்ளாமல் மரக்காணம் வடக்கு பகுதியில் மனைப்பிரிவுகள் அமைத்த நிறுவனம், ஹெலிகாப்டர் மூலம் வாடிக்கையாளர்களை அழைத்து சென்றபோது சில வருவாய்துறையினர் உடன் சென்றனர் என புகார் எழுந்தது.
குடியரசு தினத்தை புறக்கணித்துவிட்டு ரியல் எஸ்டேட் நடத்துபவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த வருவாய்த்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வருவாய்துறையினர் ஹெலிக்காப்டரில் செல்லும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.
இது குறித்து மரக்காணம் வட்டாட்சியர் பழனியை தொடர்பு கொண்டு கேட்டபோது, “நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு 26-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு வருவாய்துறையினர் சென்றனர். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் வருவாய்துறையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு நலன் கருதி அங்கு இருக்கவேண்டும் என்பதால் அங்கு சென்றனர்.” என்றார்.
மேலும் இது குறித்து வருவாய் ஆய்வாளர் வனமயிலிடம் கேட்டபோது, “ஹெலிகாப்டர் பறக்க முறையான அனுமதி பெறவில்லை. மிகவும் தாழ்வான நிலையில் பறப்பதால் கால்நடைகள் மிரள்கிறது என பிரதாப் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டோம். அதில், ஹெலிகாப்டரில் சென்றது உண்மைதான். விசாரணை அறிக்கையை முறைப்படி உரிய அதிகாரிகளுக்கு அனுப்பிவிட்டேன்.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...