Published : 02 Feb 2025 05:13 PM
Last Updated : 02 Feb 2025 05:13 PM
சென்னை: “இசிஆர் சம்பவத்தில் திமுக மீது பொய் பழி போட்ட எதிர்க்கட்சிகள் இப்போது தங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்கள்? வீராவேசமாக அறிக்கைவிட்ட பழனிசாமி மன்னிப்புக் கேட்பாரா?” என்று சட்ட அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: திமுக ஆட்சியின் நலத்திட்டங்களால் மகளிர் முன்னேறுவதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் பெண்களின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் திமுக அரசின் மீது பழி போட முயற்சிப்பதும் சில நாட்களிலேயே உண்மை தெரிய வந்து அந்த முயற்சி தோல்வியடைவதும் வாடிக்கையாகிவிட்டது.
அந்த வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் பயணித்த காரை வழிமறித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சந்துரு என்ற முக்கிய குற்றவாளி அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர் என தனது பின்புலத்தை அவரே ஒப்புக் கொள்ளும் வீடியோ ஊடகங்களில் வெளியாகி வைரலாகியிருக்கிறது.
திமுக கொடியைக் காட்டி திமுக மீது பொய்யான வீண் பழி சுமத்தி அதன் மூலம் சுயநல அரசியல் செய்ய நினைத்தவர்களின் முகமூடி கிழிந்து தொங்குகிறது. பெண்கள் மீதான பாலியல் தாக்குதல், போக்ஸோ குற்றங்கள் என அதிமுகவை சேர்ந்தவர்களும் அவர்களது குடும்பத்தினரும்தான் பெண்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது ஒவ்வொரு குற்றச் செயலின் பின்புலத்தையும் ஆராய்ந்தால் தெரிய வருகிறது.
திமுக மீது பொய் பழி போட்ட எதிர்க்கட்சிகள் இப்போது தங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்கள்? வீராவேசமாக அறிக்கைவிட்ட பழனிசாமி மன்னிப்புக் கேட்பாரா?. இவ்வாறு அமைச்சர் ரகுபதி அதில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...