Published : 02 Feb 2025 09:33 AM
Last Updated : 02 Feb 2025 09:33 AM
மக்களவைத் தேர்தல் சமயத்தில் பாஜக-வும் அதிமுக-வும் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் அதிக முனைப்புடன் இருந்தார் தமாகா தலைவர் ஜி.கே.வாசன். ஆனால், அது கைகூடாமல் போனது. இருந்த போதும் அதிமுக பக்கம் சாயாமல், தன்னை மாநிலங்களவைக்கு அனுப்ப ‘அணிலாய்’ உதவிய பாஜக பக்கமே நிற்கிறார். அடுத்த கட்ட முடிவுகள், திமுக ஆட்சியின் செயல்பாடு, பெரியார் குறித்த விமர்சனம் உள்ளிட்டவை குறித்து ‘இந்து தமிழ் திசை’க்கு அவர் அளித்த நேர்காணல் இது.
உங்கள் தந்தை ஜி.கே.மூப்பனார் அகில இந்திய காங்கிரஸின் அசைக்கமுடியாத ஒரு அங்கமாக விளங்கியவர். அவரது வெற்றிடத்தை உங்களால் நிரப்ப முடிகிறதா?
எனது தந்தை மூப்பனாருடன் என்னை நான் ஒப்பிட்டது இல்லை. அவரது உயரம் வேறு. என் உயரம் வேறு. அவரது காலம் வேறு. என்னுடைய காலம் வேறு. அன்றைக்கு இருந்த அரசியல் சூழல் வேறு. இன்றைக்கு அரசியல் சூழல் வேறு. என்ற போதும் அவரைப் போலவே கட்சியை ஒரு கூட்டுக் குடும்பமாக நடத்தி வருகிறேன்.
காங்கிரஸில் இருந்து பிரிந்து தமாகா தொடங்கியதற்காக எப்போதாவது வருத்தப்பட்டதுண்டா?
காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியே வந்த கட்சிகளுக்கு ஒவ்வொரு காரணம் உள்ளது. எல்லாம் அந்த நேரம். சூழலுக்கு ஏற்றவாறு எடுக்கப்பட்ட முடிவுகள். அதன்படி தான் 2014ம் ஆண்டு நவம்பரில் முடிவெடுக்கப்பட்டு தொடங்கிய தமாகா 10 ஆண்டுகளை நிறைவு செய்து 11-ம் ஆண்டில் சென்று கொண்டிருக்கிறது. வெற்றி தோல்வி களைத் தாண்டி, இந்த, கட்சி உயிரோட்டமான கட்சியாக மக்கள் பணியாற்றி வருகிறது. தமாகா என்றால் மரியாதைக்குரிய கட்சி என்ற பெயரை எடுத்திருக்கிறோம்.
காங்கிரஸ் கொள்கைகளில் உதயமான தமாகா பாஜக-வுக்கு ஆதரவாக நிற்பது முரண்பாடாக தெரியவில்லையா?
காங்கிரஸ் ஆட்சி காலம் வேறு. இன்றைய காலகட்டம் வேறு. நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு, ஸ்திரமான ஆட்சி போன்றவை எல்லாம் பாஜக-வால் முடியும் என்பதை இந்திய மக்கள் தீர்மானித்துள்ளனர். ஆக, தமாகா-வின் நிலைப்பாடு என்பது இந்திய அளவில் சரியான நிலைப்பாடாக உள்ளது. அதற்காக பாஜக அளவுக்கு காங்கிரஸ் அகில இந்திய அளவில் வளரவில்லை என்று குறைத்து மதிப்பிட்டுப் பேசவில்லை. ஆனால், இண்டியா கூட்டணியின் தலைமையிடத்தை காங்கிரஸ் பிடிக்குமா என்ற கேள்வி அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கே இப்போது இருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.
தமாகா தொண்டர்களின் எண்ணிக்கை எவ்வளவு? தனித்து நின்றால் தமாகா எத்தனை சதவீத ஓட்டு வாங்கும்?
தமிழகம் முழுவதும் கிராம, வட்டார, நகர ரீதியாக தமாகாவினர் உள்ளனர். ஆளுங்கட்சி, ஆண்ட கட்சியை தவிர வேறு எந்தக் கட்சி தனித்து நின்றாலும் 2 இலக்க சதவீதத்தில் வாக்கு கிடைக்குமா என்பது சந்தேகம். தனித்து நிற்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால் தான் கூட்டணி வைக்கின்றனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுகவும் பாஜகவும் புறக்கணித்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பெரிய கட்சியாகவும், பிரதான எதிர்க்கட்சியாகவும் இருக்கும் அதிமுக-வே தேர்தலை புறக்கணித்திருப்பதில் உண்மையான, நியாயமான அர்த்தங்கள் உள்ளன. திமுக ஆட்சியில் இடைத்தேர்தல்கள் ஜனநாயக முறைப்படி நடப்பதில்லை. பணநாயகமாக நடைபெறுகிறது. அதற்கு நாங்கள் ஒருபோதும் உடந்தையாக இருக்க முடியாது.
பெரியார் மண் அல்ல பெரியாரே மண் தான் என நாதக-வினர் ஈவிகேஎஸ் வீட்டுக்கு எதிரிலேயே கூட்டம் போட்டுப் பேசி இருக்கிறார்கள். சீமான் ஒன்றும் தவறாகப் பேசவில்லையே, பெரியார் பேசியதைத்தானே சொல்கிறார் என்றும் சிலர் வக்காலத்து வாங்குகிறார்களே?
பெரியார் உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும் இரண்டு பக்கம் உண்டு. இரண்டு பக்கம் என்றால் அவர்களின் கருத்தில் சரி தவறு. வாதங்கள் பிரதிவாதங்கள் அந்தக் காலத்திலேயே இருந்தது. அவர்கள் சொன்ன நல்ல கருத்துகளுக்கே வாதங்கள் பிரதிவாதங்கள் இருக்கத்தான் செய்யும். இது அப்போதும் இருந்தது. இப்போதும் இருக்கிறது. அதேசமயம், மறைந்த தலைவர்களை பற்றி பேசுவது தவிர்க்கப்படலாம் என்பது என் போன்றவர்களின் கருத்து. ஆனால், அதனை நான் யாரிடமும் திணிக்க முடியாது; அந்த உரிமை எனக்குக் கிடையாது.
பெரியார் விஷயத்தில் பதில் சொல்ல வேண்டிய திக தலைவர் வீரமணி, ‘பைத்தியம் பிடித்தவர்களுக்கு பதில் சொல்ல மாட்டோம்’ என்று சொல்வது சரியா?
தமிழகத்தின் மூத்த தலைவர் வீரமணி, ஏதோ அப்படி ஒரு வார்த்தையை சொல்லியிருக்கலாம். அவரிடமிருந்து பதிலை எதிர்பார்ப்பவர்கள் நிறையப் பேர் இருக்கலாம்.
2026-ல் தமிழகத்தில் பாஜக-வுக்கு சாதகமான சூழல் அமையும் என நம்புகிறீர்களா?
ஒவ்வொரு தேர்தலுக்கும் மக்களின் அணுகுமுறை வெவ்வேறாக இருக்கிறது. மக்களின் மனநிலைக்கு ஏற்றவாறு. கூட்டணிக்கு ஏற்றவாறு வாக்குகள் அமைகிறது. கூட்டணிகள் முழுமை அடையும் போது உண்மை நிலை வெளிவரும். பாஜக தமிழகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
தமிழகத்துக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருகிறதே. கூட்டணி தோழர்களுக்கு இதையெல்லாம் எடுத்துரைக்க மாட்டீர்களா?
நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக தமிழகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் பல்வேறு துறைகளின் அமைச்சர்களை சந்தித்து பேசுவது என்னுடைய வழக்கம். ஆனால், அதையெல்லாம் உடனுக்குடன் வெளியே சொல்வது எனது பழக்கம் அல்ல. எனது கடமையைச் செய்கிறேன். விளம்பரம் செய்வது இல்லை. தமிழகத்தின் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசுகிறேன். முக்கியமான பிரச்சினை என்றால் மட்டும் பத்திரிகையாளர்களை அழைத்து தெரிவிக்கிறேன்.
ஒருவேளை, அதிமுக - பாஜக கூட்டணி அமையாவிட்டால் பாஜக அணியில் தான் தமாகா தொடருமா?
இன்னும் 6 மாத காலத்துக்கு கட்சியைப் பலப்படுத்தும் வேலைகளைச் செய்ய இருக்கிறேன். தமாகா-வின் பலம் என்ன என்பதை உறுதிப்படுத்துவதற்கான பணிகளைச் செய்ய நினைக்கிறேன். அப்போது தான் தேர்தல் சமயத்தில் எங்களுக்கு முக்கியத்துவமும் இருக்கும். எல்லா கட்சிகளும் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணியை பலப்படுத்தவே நினைப்பார்கள்.
பாஜக அணியில் தொடர்வது வாசனுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கலாம். தமாகா-வுக்கு எந்தப் பலனும் இல்லை என்கிறார்களே?
சட்டமன்றத்தில் மீண்டும் தமாகா-வின் குரல் ஒலிக்க வேண்டும். தமாகா தலைவர் என்கிற வகையில் கட்சியைப் பலப்படுத்தும் பணிகளை நான் செய்து வருகிறேன். கட்சியை இன்னும் மேலே கொண்டு செல்லும் பணி தான் எங்களுக்கு உள்ளது. எங்கள் கட்சி தான் எங்களுக்கு முக்கியம். கூட்டணிக் கட்சி பற்றி நாங்கள் பேசுவதில்லை.
ஜி.கே.வாசன் மத்திய அமைச்சராக போவதாக எழுந்த பேச்சுகள் சத்தமில்லாமல் அடங்கிவிட்டதே?
தமிழகத்தில் இருந்து பாஜக-வை சேர்ந்த ஒருவர் மத்திய இணையமைச்சராக இருக்கிறார். வரும் காலங்களில் எங்களுக்கு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் போது. எங்களுக்கான பிரதிநிதித்துவத்தை பாஜக கொடுக்கும் என்று நம்புகிறேன்.
வேங்கைவயல் விவகாரத்தில் அரசை விமர்சித்து வந்த எதிர்க்கட்சிகள், இப்போது, உண்மைக் குற்றவாளிகளை பிடிக்கவில்லை என விமர்சனம் செய்கின்றன. இதில் அரசுக்கு என்ன உள்நோக்கம் இருக்கும் என நினைக்கிறீர்கள்?
எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சிகளே எதிர்க்கின்றனர். எப்போது ஆளுங்கட்சியுடன் இருக்கும் கட்சிகளே குற்றம் சாட்டுகிறார்களோ, நியாயம் கிடைப்பதில் சந்தேகம் இருக்கிறது. அந்த சந்தேகத்தைத் தீர்க்க வேண்டும். மக்கள் உங்களை கூர்ந்து கவனித்துக் கொண்டுள்ளனர். நியாயமான நீதி வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
200 இடங்களில் வெல்வோம் என்ற திமுக-வின் லட்சியம் கைகூடினால் என்னாகும் என நினைக்கிறீர்கள்?
தொண்டர்களுக்கு நம்பிக்கை கொடுப்பது கட்சி தலைவரின் கடமை. ஒத்த கருத்துடைய இன்னும் பல கட்சிகளை ஒன்று சேர்த்து எங்கள் கூட்டணியை இன்னும் பலப்படுத்தி, மக்களுக்கு நம்பிக்கை கொடுத்து ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பை நாங்கள் ஏற்படுத்துவோம். திமுக அரசுக்கு எதிர்மறை வாக்குகள் அதிகரித்துக் கொண்டே செல்வதால், எங்களைப் போன்றவர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ளது. மக்களின் மனநிலை தேர்தலில் மாறும். அந்த நம்பிக்கையில் நாங்கள் களத்துக்குப் போகிறோம். என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். எஜமானர்கள் மக்கள் தான்.
2026 தேர்தலிலும் அதிமுக தோற்றால் பழனிசாமியின் தலைமைக்கு ஆபத்து வரும் என்கிறார்களே?
ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்று சேர்ந்து தமிழகத்தில் மாற்றம் ஏற்பட்டால், திமுக ஆட்சி இருக்காது. இது எங்களுடைய கருத்து.
திமுக ஆட்சி பற்றி உங்களது கருத்து? 2026-ல் திமுக அழைத்தால் கூட்டணி சேருவீர்களா?
மக்களின் மனநிலைக்கு ஏற்றவாறு ஆட்சியாளர்கள் செயல்படவில்லை. பல நேரங்களில் மக்கள் விரோத ஆட்சியாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. வேங்கைவயல் போன்ற சம்பவங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. இதற்கு மேல் திமுக-வுடன் கூட்டணி என்ற கேள்விக்கு பதில் இல்லை.
நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீர்கள்? கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்கிறாரே?
சினிமா துறையில் பிரபலமானவர் விஜய். தனக்கென்று ரசிகர்களை வைத்துள்ளார். மக்கள் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார். அதனை அடித்தளமாக வைத்து கட்சி தொடங்கியுள்ளார். தேர்தல் களத்தில் மக்கள் தான் அவருக்கான இடத்தை முடிவு செய்வார்கள். கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பது அவருடைய எண்ணம். இதுவரை தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுக்கும் நிலை இல்லை. காலத்துக்கு ஏற்ப, மக்களின் மனநிலைக்கு ஏற்ப மாற்றங்கள் வரும் என்றால் வந்து தான் ஆகும். அதை யாராலும் தடுக்க முடியாது.
படம்: ம.பிரபு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...