Published : 02 Feb 2025 03:22 AM
Last Updated : 02 Feb 2025 03:22 AM
சென்னை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பையும், விமர்சனத்தையும் முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: வருமான வரி விலக்கு உயர்வு, உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்த அடிப்படை சுங்கவரிகளில் சில மாற்றங்கள், சிறு தொழில்களுக்கான அறிவிப்புகள் உள்ளிட்டவை வரவேற்கத்தக்கது. பிஹார் மாநிலத்துக்கான வளர்ச்சி திட்டங்களால், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை என கூறுவதைவிட பிஹார் மாநில நிதிநிலை அறிக்கை என கருதும்படி அமைந்துள்ளது. தமிழகத்துக்கு நதிநீர் இணைப்பு, ரயில்வே திட்டம், கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் போன்ற அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. இது ஒரு மாயாஜல அறிக்கையாக, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கையாக தோன்றுகிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: வருமான வரி உச்சவரம்பு அதிகரிப்பால் நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பு அதிகரிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சிறு தொழில் நிறுவனங்களுக்கு வருமான வரம்பை உயர்த்தியிருப்பதன் மூலம் தொய்வின்றி நிறுவனங்கள் செயல்பட்டு, இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்க நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்திருக்கிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: பட்ஜெட் மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய எந்த அறிவிப்பும் இல்லை. அனைத்து மாநிலங்களையும் சமமாக கருதாமல் அப்பட்டமான பாரபட்சத்தோடு நிதி ஒதுக்கீடு இருக்கிறது. 140 கோடி பேரில் ரூ.12 லட்சம் வரி விலக்கு அறிவிப்பால் 2 சதவீத பேர் பயன்பெறும் நிலையில், மீதமுள்ள 138 கோடி மக்களுக்கு என்ன சலுகை வழங்கினார் என்பதை நிதியமைச்சர் விளக்க வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை ஈட்டுபவர்கள் வரி செலுத்த தேவையில்லை, மருத்துவப் படிப்புக்கு 75 ஆயிரம் கூடுதல் இடங்கள் உள்ளிட்டவை வரவேற்கத்தக்கவை. வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்வது தொடர்பான அறிவிப்பு இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும் உரிய அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கி பிஹார் மாநிலத்துக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்து, தமிழகத்தை வஞ்சித்து இருப்பது கண்டிக்கத்தக்கது.
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: பட்ஜெட்டில் உர மானியம், பெட்ரோலிய மானியம் குறைக்கப்பட்டிருப்பது விவசாயத்தையும், எரிவாயு விலைகளையும் கடுமையாக பாதிக்கும். மின்சாரத்தை தனியார்மயமாக்க மாநிலங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ள பாஜகவுக்கு வன்மையான கண்டனம்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: நிச்சயமற்ற வருமான பிரிவில் உள்ள சுமார் 130 கோடி மக்களின் வாங்கும் சக்தி சரிந்து வருவதை தடுத்து, மேம்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. வழக்கம்போல பன்னாட்டு குழும நிறுவனங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ள நிதிநிலை அறிக்கை, அடித்தட்டு மக்களையும், உழைக்கும் மக்களையும் வஞ்சித்துள்ளது.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பட்ஜெட்டில் வரி விதிப்பு, நகர்ப்புற மேம்பாடு, மின்சாரம், சுரங்கம், நிதி சீர்திருத்தம், மற்றும் ஒழுங்குமுறை ஆகிய 6 முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டிருப்பது நன்றிக்குரியது. மக்கள் நம்பிக்கை வைத்து பாஜகவை ஆட்சியில் அமரவைத்ததை பூர்த்தி செய்யும் வகையில் பட்ஜெட் அமைந்திருக்கிறது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்: வருமான வரி உச்சவரம்பு உயர்வு, பட்டியலினத்தவர், பெண்களுக்கு கடன் திட்டத்தை வரவேற்கிறேன். பெட்ரோல், டீசல், ஜிஎஸ்டி வரி குறைப்பு, விலைவாசியை கட்டுப்படுத்துதல், வேலைவாய்ப்பை அதிகரித்தல் குறித்து அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழகத்தில் மிகத் தொன்மையான இரும்பு நாகரிகம் அறிவிக்கப்பட்ட நிலையில், உரிய அங்கீகாரமும் சுற்றியுள்ள பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள நிதியும் வழங்காதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சத்தோடு நடந்துகொள்வது சரியான அணுகுமுறை இல்லை.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: ஏழை, எளிய நடுத்தர மக்களின் சுமையை குறைக்கும் பட்ஜெட்டாக விளங்குகிறது. மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் விதமாக அமைந்துள்ள பட்ஜெட்டை வரவேற்கிறேன்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: நதிகள் இணைப்பு, புல்லட் ரயில் திட்டம், ஜிஎஸ்டி வரி குறைப்பு, தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரணம் போன்றவை இல்லாதது ஏமாற்றத்தை தருகிறது. தமிழகத்தில் தொழிற்சாலைகள் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்க அறிவிப்பு இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியையும் பொருளாதார நிலைத்தன்மையையும் உறுதிபடுத்தும் பட்ஜெட்.. குடிமக்கள் அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் வகையிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...