Published : 02 Feb 2025 01:14 AM
Last Updated : 02 Feb 2025 01:14 AM

தனிநபர்களின் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்யும்போது உயிரிழந்தால் உரிமையாளரே இழப்பீடு தரவேண்டும்

சென்னை: தனிநபர்களின் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்யும்போது உயிரிழப்பு ஏற்பட்டால் அதன் உரிமையாளர்தான் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை விநாயகபுரத்தைச் சேர்ந்த யோகேஷ்பாபு என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:

எங்களது பகுதியில் முறையான கழிவுநீர் இணைப்பு இல்லை. எனது வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டி நிறைந்து விட்டால் அதை மாநகராட்சி ஊழியர்கள் மூலமாக அகற்றுவது வழக்கம். கடந்த 2013 செப்.30 அன்று எனது வீட்டின் கழிவுநீர் தொட்டி நிறைந்ததால், சென்னை மாநகராட்சி 3-வது மண்டல ஊழியர்கள் கழிவுநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, முனுசாமி என்ற ஊழியர் நச்சு வாயு தாக்கி இறந்தார். அவரை சக ஊழியர்கள் காப்பாற்ற முயன்றும் பலன் இல்லை.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தேன். அத்துடன் பாதிக்கப்பட்ட முனுசாமியின் குடும்பத்துக்கு ரூ.55 ஆயிரத்தை இழப்பீடாக வழங்கினேன். இந்நிலையில் இறந்த முனுசாமியின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டுமென சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரி எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

எங்களது பகுதியில் முறையான பாதாள சாக்கடை வசதி செய்து தரப்படவில்லை என்பதால்தான் கழிவுநீர் தொட்டி அமைத்து கழிவுநீரை அகற்றி வருகிறோம். மாநகராட்சி ஊழியரான முனுசாமியின் இறப்பு துரதிருஷ்டவசமானது என்பதால்தான் எனது சொந்த பணம் ரூ.55 ஆயிரத்தை அவரது மனைவியிடம் வழங்கினேன்.

இந்நிலையில் முழு இழப்பீட்டுத் தொகைக்கும் நானே பொறுப்பு என நோட்டீஸ் அனுப்பியிருப்பது சட்டவிரோதமானது. எனவே அந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில் வழக்கறிஞர் ஏ.சி.மணிபாரதி ஆஜராகி, ‘‘தனிநபர்கள் மற்றும் தனியார் கழிவுநீர் தொட்டியில் விபத்து ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட உரிமையாளர்தான் பொறுப்பேற்க வேண்டும். எனவே இறந்த நபரின் குடும்பத்துக்கு மனுதாரர்தான் இழப்பீடு வழங்க வேண்டும். ஒருவேளை மாநகராட்சி அவசர நிமித்தமாக அந்த தொகையை வழங்கினால் வீட்டின் உரிமையாளரிடமிருந்து அந்த தொகையை மாநகராட்சி வசூலிக்கலாம் என அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

அதையடுத்து நீதிபதி, ‘‘மனுதாரர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒரு நபரின் இறப்புக்கு பொறுப்பாகியுள்ளார். உரிய விதிகளின் அடிப்படையில்தான் அவருக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை மாநகராட்சி உரிய இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவரின் மனைவியிடம் ஏற்கெனவே வழங்கியுள்ளது. எனவே, அந்த தொகையை மனுதாரரிடம் வசூலிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கலாம்’’ என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x