Published : 01 Feb 2025 09:31 PM
Last Updated : 01 Feb 2025 09:31 PM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்துக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு விழா நடைபெறும் இடத்தில் 30 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் களஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் வரும் 6, 7-ம் தேதிகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்கிறார்.
வரும் 6-ம் தேதி பிற்பகலில் தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலிக்கு வரும் அவர் திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் சிப்காட்டில் சோலார் தொழிற்சாலையை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் பாளையங்கோட்டையில் ரூ.40 கோடியில் கட்டப்பட்டுள்ள காந்தி மார்க்கெட்டை திறந்து வைக்கிறார். இந்த மார்க்கெட் வளாகத்தில் 50 டன் வரை காய்கறிகளை கெடாமல் வைத்திருக்கும் வகையில் குளிர்பதன கிட்டங்கியும் அமைக்கப்பட்டிருக்கிறது. மாலையில் திருநெல்வேலி கிழக்கு மற்றும் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். அடுத்த நாள் 7-ம் தேதி காலையில் வண்ணார்பேட்டையிலுள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து பாளையங்கோட்டையிலுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மைதானத்தில் நடைபெறும் விழாவில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசுகிறார்.
இந்த விழாவின்போது சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் ரூ.78 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ வளாகத்தை திறந்து வைக்கிறார்.
தமிழக முதல்வரின் வருகையை முன்னிட்டு திருநெல்வேலியில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு விழா நடைபெறவுள்ள அரசு மருத்துவ கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பந்தலில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்படுகிறது. இங்கு நடைபெறும் அரசு விழாவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இலவச பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் வழங்கவுள்ளார்.
தமிழக முதல்வரின் வருகையை முன்னிட்டு திருநெல்வேலி வண்ணார்பேட்டையிலுள்ள அரசு விருந்தினர் மாளிகை புனரமைப்பு, முதல்வரின் கார் செல்லும் வழிகளில் உள்ள சாலைகள் சீரமைப்பு பணிகள் இரவு பகலாக முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...