Published : 01 Feb 2025 04:30 PM
Last Updated : 01 Feb 2025 04:30 PM

100 நாள் வேலை திட்ட நிதி ஒதுக்கீடு - மத்திய பட்ஜெட் மீது ராமதாஸ் அதிருப்தி

சென்னை: “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.86 ஆயிரம் கோடி நிதி தான் இந்த முறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிதியைக் கொண்டு ஏழைக் குடும்பங்களுக்கு குறைந்தது 50 நாட்கள் கூட வேலை வழங்க முடியாது என்பதால் இந்த நிதி ஒதுக்கீட்டை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:“இந்தியாவில் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை ஈட்டுபவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நிரந்தரக் கழிவு ரு.75 ஆயிரம் ஆக அதிகரிக்கப்பட்டிருப்பதால் ரூ.12.75 லட்சம் வரை வரி செலுத்தத் தேவையில்லை. இதனால் நடுத்தர வர்க்கத்தினரின் வரிச்சுமை பெருமளவில் குறையும். அந்த வகையில் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் மருத்துவப் படிப்புக்கு 75 ஆயிரம் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும்; அடுத்த நிதியாண்டில் மருத்துவப் படிப்புக்கு கூடுதலாக 10 ஆயிரம் இடங்கள் உருவாக்கப்படும். 36 வகையான உயிர்காக்கும் மருந்துகளுக்கு சுங்கவரி முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டிருப்பதும், அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை ஆகும்.

பள்ளிக் கல்விக்கு ரூ.78572.10 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது போதுமானது அல்ல. அதேபோல், ரயில்வே திட்டங்கள் குறித்தும், நீர்ப்பாசனத் திட்டங்கள் குறித்தும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. கிராமப்புறங்களில் வறுமையை ஒழிப்பதற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.86 ஆயிரம் கோடி நிதி தான் இந்த முறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிதியைக் கொண்டு ஏழைக் குடும்பங்களுக்கு குறைந்தது 50 நாட்கள் கூட வேலை வழங்க முடியாது என்பதால் இந்த நிதி ஒதுக்கீட்டை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேளாண் உற்பத்திப் பொருட்கள் அனைத்துக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்பட வேண்டும் என்பது தான் விவசாயிகளின் கோரிக்கை ஆகும். இதை வலியுறுத்தி விவசாயிகள் போராடி வரும் நிலையில், அதுகுறித்த அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுவதை சட்டப்பூர்வ உரிமையாக்கும் வகையில் சட்டம் கொண்டு வரவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x