Published : 01 Feb 2025 02:50 PM
Last Updated : 01 Feb 2025 02:50 PM
மதுரை : தைப்பூச விழா நெருங்கி வரும் நிலையில் நாடு முழுவதும் இருந்து முருக பக்தர்கள் திருப்பரங்குன்றம் வருவதை தடுக்கும் வகையில் மலை குறித்து சில சமூக விரோத அமைப்புகள் பதற்றத்தை உருவாக்கி வருகின்றன. இதை தடுக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக தென் தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலாளர் லெட்சுமன நாராயணன், மதுரை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவின் விவரம்: “தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை விரும்பாத சிலர், திருப்பரங்குன்றம் மலையை வைத்து மத மோதல்களை உருவாக்கும் வகையில் விரும்பத்தகாத செயல்களை செய்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலைப் பகுதிக்கு அசைவ உணவுகளை எடுத்துச் சென்று சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தவும், ஆடு, கோழி பலியிடும் பழக்கத்தை ஏற்படுத்தவும் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். இது முருகப்பெருமான் மீது பக்தி கொண்ட ஆன்மிக உணர்வாளர்களை புண்படுத்தும் விதமாகவும், அவர்களின் மத நம்பிக்கைக்கு எதிராகவும் அமைந்துள்ளது. எனவே இதுபோன்ற செல்களுக்கு மாவட்ட நிர்வாகம் ஒருபோதும் அனுமதி வழங்கக்கூடாது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திருப்பரங்குன்றம் மலை, அதனை சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்தும் திருப்பரங்குன்றம் முருகனுக்கே சொந்தம் என பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் இந்திய நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன. இதற்கு புறம்பாக சட்ட விரோத அமைப்புகள் திருப்பரங்குன்றம் மலைக்கு உரிமை கொண்டாடுவது கண்டிக்கதக்கது.
முருகனின் தைப்பூச விழா நெருங்கி வரும் நிலையில் நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாகவும், பல நாட்கள் விரதம் இருந்தும் முருகனை தரிசனம் செய்ய வரும் நிலையில் அதை தடுக்கும் வகையில் சில சமூக விரோத அமைப்புகள் பதற்றத்தை உருவாக்கி வருகின்றன.எனவே திருப்பரங்குன்றம் முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் எவ்வித இடையூறு இல்லாமல் முருகனை தரிசிக்க மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலை குறித்து தவறான செய்திகளை பரப்பி வரும் இஸ்லாமிய அமைப்புகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...