Published : 01 Feb 2025 12:59 PM
Last Updated : 01 Feb 2025 12:59 PM

ஆறு - மழைநீர் வடிகால் இணையுமிடங்களில் சென்னை மாநகராட்சியின் பராமரிப்பின்றி துருப்பிடித்து நிற்கும் தடுப்பு கதவுகள்

சென்னை மாநகரப் பகுதியில் உள்ள கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் கேப்டன் காட்டன், ஓட்டேரி நல்லா உள்ளிட்ட 30 சிறுகால்வாய்கள் உள்ளன. இவை மழை காலங்களில் வெள்ளநீர் வடிவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வேறு எந்த மாநகரிலும் இதுபோன்று வடிகால் வசதிகள் இல்லை.

இந்த கால்வாய்கள் போதிய பராமரிப்பின்றி நீண்ட கால ஆக்கிரமிப்புகள், கட்டுப்பாடு இன்றி கட்டுமானக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கழிவுகள் கொட்டப்பட்டதால், அவற்றின் அகலம் குறைந்து, மழைநீர் கொள்திறனும் குறைந்தது. இதனால் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது சென்னையில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. நிலைமையை உணர்ந்த அரசுத்துறைகள் பின்னர் ஆக்கிரமிப்புகள் மற்றும் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு, கால்வாய்களை அகலப்படுத்தின.

சென்னை மாநகராட்சி சார்பில் 2 ஆயிரத்து 624 கிமீ நீள மழைநீர் வடிகால்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் மேற்கூறிய ஆறுகள் மற்றும் கால்வாய்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. மழை காலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் பெரிய அளவில் மழை பெய்யாத நிலையில், அங்கு மழைநீர் தேக்கம் அதிகமாக இருப்பது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டது.

இதில், மழை காலங்களில் ஆறுகள், கால்வாய்களில் அதிகமாக நீர் செல்லும்போது, அவற்றின் மட்டம் உயர்ந்துவிடுகிறது. அப்போது, ஆறுகள் மற்றும் கால்வாய்களுடன் இணைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் வழியாக வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து வெள்ளம் ஏற்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

குறிப்பாக, சென்னை புளியந்தோப்பு மற்றும் வியாசர்பாடி கணேசபுரம் பகுதியில் மழை குறைவாக பெய்தாலும், ஓட்டேரி நல்லா கால்வாயின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்வதால் கால்வாயில் அதிகமாக வெள்ளநீர் செல்லும்போது அவை புளியந்தோப்பு குடியிருப்பு பகுதிகள் மற்றும் டாக்டர் அம்பேத்கர் சாலை, கணேசபுரம் சுரங்கப் பாலம் பகுதியில் வெள்ளநீர் தேக்கத்தையும், போக்குவரத்து பாதிப்பையும் ஏற்படுத்திவிடுகிறது.

இந்நிலையில், மழை காலங்களில் ஆறுகள், கால்வாய்களுடன் மழைநீர் வடிகால் இணையும் இடங்களில் தடுப்பு கதவுகளை அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு முதல் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பு கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆறுகள், கால்வாய்களில் அதிக அளவில் வெள்ளநீர் வரும்போது, மழைநீர் வடிகால்கள் இணையுமிடங்களில் அமைக்கப்பட்டுள்ள கதவுகளை மூடி, வெள்ளநீர் மழைநீர் வடிகால்கள் வழியாக குடியிருப்பு பகுதிக்குள் செல்வதை தடுப்பதே இதன் நோக்கம். ஆறுகள், கால்வாய்களில் வெள்ளநீர் மட்டம் குறைந்ததும், கதவுகளை திறந்து, மழைநீர் வடிகால் வழியாக குடியிருப்பு பகுதி நீர் வெளியேற்றப்படும்.

இந்த கதவுகள் பெரும்பாலான இடங்களில், நிறுவிய நாள் முதல் இயக்கப்படாமல் துருப்பிடித்து கிடக்கின்றன. பருவமழை முன்னேற்பாடு பணிகளின்போது கூட, அதை இயக்கி ஒத்திகை பார்ப்பதும் இல்லை. ஆற்று நீரின் அளவை கண்காணித்து, கதவுகளை மூடவும், திறக்கவும் பணியாளர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் இதுபோன்ற கதவுகள் அமைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை முடிந்த நிலையில், பேசின் பாலம் அருகில், பக்கிங்ஹாம் கால்வாயுடன் இணையும் இடத்தில், உட் வார்ப் சாலையில் இப்போது புதிதாக கதவு அமைக்கப்பட்டுள்ளது. மாநகரில் ஏற்கெனவே பல்வேறு இடங்களில் நிறுவப்பட்ட கதவுகளை 2 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்காத நிலையில், இதுபோன்ற கதவுகளை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து நிறுவி, நிதி விரயம் செய்து வருகிறது என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ஒருவரும் பதில் அளிக்க முன்வரவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x