Last Updated : 01 Feb, 2025 09:01 AM

3  

Published : 01 Feb 2025 09:01 AM
Last Updated : 01 Feb 2025 09:01 AM

டங்ஸ்டன் | யார் குழந்தை பெற்றாலும் நாங்களே இனிஷியல் போடுவோம் என்பதா? - திமுகவை சாடும் பாஜக!

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்தானதற்கு திமுக, பாஜக, அதிமுக என போட்டிபோட்டு பாராட்டு விழாக்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் திட்டத்​துக்கு அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்​பியதை அடுத்து, சட்டமன்​றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர், “நான் முதல்வராக இருக்கும் வரை இந்தத் திட்டத்தை வரவிட​மாட்​டேன்” என அறிவித்​தார். அதிமுக-வும் இந்தத் திட்டத்​துக்கு எதிராக பேரவையில் குரல் கொடுத்தது. களத்துக்கு வந்து மக்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணா​மலை​யும், “டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக நல்ல முடிவை மத்திய அரசு அறிவிக்​கும்” என, உறுதி​யளித்​தார்.

இந்நிலையில் ஜனவரி 21-ம் தேதி, அண்ணாமலை மற்றும் மாநில பாஜக பொதுச்​ செய​லாளர் இராம.சீனி​வாசன் தலைமையிலான பாஜக-​வினர் விவசா​யிகளை டெல்லிக்கே அழைத்துச் சென்று மத்திய சுரங்​கத்துறை அமைச்சர் கிசன் ரெட்டியை சந்தித்​தனர். இந்தச் சந்திப்​புக்குப் பிறகே திட்டம் கைவிடப்​படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

இதற்கிடையில் டங்ஸ்டன் திட்டம் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் சிலரை அமைச்சர் பி.மூர்த்தி சென்னைக்கு அழைத்துச் சென்று முதல்வரை சந்திக்க வைத்தார். அப்போது அவர்கள், முதல்​வருக்கு நன்றி தெரிவித்​தனர். மேலும் அவர்கள், டங்ஸ்டன் திட்டம் ரத்துக்கு காரணமாக இருந்​தமைக்காக ஊரில் பாராட்டுவிழா நடத்துவதாக முதல்​வருக்கு அழைப்பு விடுத்​தனர். இதன்பேரில் ஜனவரி 27-ல் முதல்வர் அரிட்​டாபட்டி, ஏ.வல்லா​ளப்​பட்​டிக்கு சென்று பாராட்டு விழாவில் பங்கேற்​றார்.

திமுக-வைத் தொடர்ந்து மதுரை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ராஜன் செல்லப்பா மேலூர் பகுதி விவசா​யிகள் சிலரை சென்னைக்கு அழைத்துச் சென்று அதிமுக பொதுச்​செய​லாளர் பழனி​சாமியை சந்திக்க வைத்தார். அப்போது, டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய குரல் கொடுத்​தமைக்காக பழனிசாமிக்கு நன்றி தெரிவித்த அவர்கள், பாராட்டு விழாவுக்கு வரும்படி அவரையும் மேலூருக்கு அழைத்​துள்ளனர். இதையெல்லாம் பார்த்து​விட்டு பாஜக தலைவர் அண்ணா​மலையும் மத்திய அமைச்சர் கிசன் ரெட்டியை 30-ம் தேதி ஏ.வல்​லா​ளப்​பட்​டிக்கு அழைத்து வந்து பாராட்டு விழா நடத்தினர்.

இப்படி முக்கிய கட்சிகள் போட்டி போட்டுக்​கொண்டு டங்ஸ்டன் திட்டம் ரத்தானதற்கு பாராட்டு விழா எடுப்பது தொடர்பாக சர்ச்​சைகள் எழுந்​துள்ளன. இந்த பாராட்டு விழாக்கள் டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து உண்மை​யிலேயே போராடிய மக்களை கொச்சைப்​படுத்துவதாக உள்ளதாக மேலூர் பகுதி மக்கள் ஆதங்கப்​படு​கின்​றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய பாஜக மாநில பொதுச்​செய​லாளர் இராம. சீனிவாசன், “டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அரசாணை வந்தபோது, திமுக எதிர்ப்பு தெரிவிக்க​வில்லை. திட்டம் குறித்து மாநில அரசிடம் கேட்ட​போதும், 5 ஆயிரம் ஏக்கர் தேவை என்ற போதிலும் மறுக்க​வில்லை. 400 ஏக்கரில் பல்லுயிர் தளம், உயிர் பன்மை சூழல் இருக்​கிறது என மட்டுமே அரசு கூறியது.

மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதை சந்தர்ப்​ப​மாகப் பயன்படுத்தி மாநில அரசு சட்டமன்​றத்தில் தீர்மானம் நிறைவேற்றி நாங்களும் டங்ஸ்டனை எதிர்க்​கிறோம் என காட்டிக்​கொண்​டனர். டங்ஸ்டன் திட்டம் ரத்தானது திமுக-வால் அல்ல. இது விஷயமாக நாங்கள் சுரங்​கத்துறை அமைச்சர் கிசன் ரெட்டியை சந்தித்து விளக்​கிய​போது, ‘உங்கள் மாநில அரசு என்ன செய்கிறது? எங்களிடம் ஏலம் எதிர்ப்பு குறித்து சொல்ல​வில்லை. விவசா​யிகளுக்கு அதிருப்தி இருப்பது பற்றி கூறவில்லை.

கடந்த பிப்ர​வரி​யிலும், நவம்பரிலும் மறுஏலம் விட்ட​போதும் ஏன் சொல்ல​வில்லை? அரிய வகை உயிரினம், கல்வெட்டு, தொல்லியல் பொருட்கள், 250 கோயில்கள் இருக்​கின்றன என்ற தகவல்களை எல்லாம் மாநில அரசு மறைத்து​விட்டது. மத்திய அரசு விவசா​யிகள், மக்கள் பக்கம் இருக்​கும். பிரதமரிடம் பேசி திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்​கப்​படும்’ என அமைச்சர் உறுதி​யளித்​தார்.

இதற்கு அடுத்த நாளே டங்ஸ்டன் திட்டம் ரத்து உத்தரவு வெளி வந்தது. ஆனால், டங்ஸ்டன் திட்டம் ரத்துக்கு காரணம் நாங்கள் தான் என, சொல்லிக்​கொண்டு அரிட்​டாபட்​டிக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்​டாலின் உரிமை கொண்டாடு​கிறார். பேரவையில் சிறப்பு தீர்மானம் போட்டதால் மத்திய அரசு பணிந்தது என்கிறார்.

அப்படி​யெனில், நீட் தேர்வுக்கு எதிராக போட்ட சிறப்பு தீர்மானத்​திற்கு ஏன் பணியவில்லை? யார் பிள்ளை பெற்றாலும், நாங்கள் தான் இனிஷியல் போடுவோம் என்பதே இன்றைய தமிழக ஆட்சி அணுகு​முறையாக உள்ளது. இது தவறான போக்கு. நீங்கள் செய்த வேலைக்கே கிரெடிட் எடுக்க​வேண்​டும். செய்தது எல்லாமே பாஜக. அதற்குரிய பெயர், புகழை நீங்கள் எடுத்​துக்​கொள்வதை கண்டிக்​கிறோம்” என்றார். இன்னும் எத்தனை பேர் ​பா​ராட்டு விழா நடத்தப்​ போகிறார்களோ!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x