Published : 01 Feb 2025 06:24 AM
Last Updated : 01 Feb 2025 06:24 AM
சென்னை: சென்னை மாநகரில் சாந்தோம் - பசுமைவழிச் சாலை வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முதல்முறையாக கேபிளில் தொங்கும் பாலம் ஒன்றை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தின் தலைநகரமாகவும், இந்தியாவிலுள்ள பெருநகரங்களில் ஒன்றாகவும், 426 சதுர கிமீ பரப்பளவில் சென்னை மாநகராட்சி அமைந்துள்ளது. இது 1688-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மிகப்பழமையான மாநகராட்சியாகும். இம்மாநகரில் ஏற்கெனவே உள்ள போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதிகளை, வருங்கால தேவைக்கு ஏற்றவாறு மேம்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
அடையார் பாலம் மற்றும் பசுமைவழிச் சாலை ஆகியவை பொது மற்றும் தனியார் வாகன போக்குவரத்து நிறைந்ததாக உள்ளன. பசுமைவழிச்சாலை மற்றும் சாந்தோம் வழித்தடத்தில் அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் ஆகியோரின் அரசு இல்லங்கள் நிறைந்துள்ளன. கல்வி நிறுவனங்கள், கடற்கரை பகுதியை அணுகும் பகுதி, தேவாலயங்களும் உள்ளன. அதனால் அங்கு அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த சாலையை அகலப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாநகராட்சி சார்பில் பட்டினப்பாக்கம் -சீனிவாசபுரம் மற்றும் பெசன்ட்நகர் ஊரூர் குப்பம் இடையே அடையாற்றின் குறுக்கே உடைந்த பாலம் வழியாக கேபிளில் தொங்கும் பாலம் அமைக்க திட்டமிட்டுள்ளது. அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ரூ.20 லட்சம் செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, கலந்தறிதற்குரியவரை நியமிக்க டெண்டர் கோரியுள்ளது.
தெரிவுசெய்யப்படும் கலந்தறிதற்குரியவர், கேபிளில் தொங்கும் பாலம் அமைப்பதற்கான நில கணக்கீடு, போக்குவரத்து கணக்கீடு, அந்த தரவுகளை பகுப்பாய்வு செய்தல், இத்திட்டத்துக்கு மாற்று திட்டம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment