Published : 01 Feb 2025 12:59 AM
Last Updated : 01 Feb 2025 12:59 AM
பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறப்பதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கி உள்ளன. இதற்கான தேதியை ரயில்வே அமைச்சகம் விரைவில் அறிவிக்க இருக்கிறது.
பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் விரிசல் விழுந்ததால் இந்தப் பாலத்தின் அருகிலேயே புதிய ரயில் பாலம் கட்டும் பணிகளுக்கு 2019 மார்ச்சில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து ரூ.535 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கின.
புதிய ரயில் பாலம் 2,078 மீட்டர் நீளமும், கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரமும் கொண்டது. 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்கள், 99 இணைப்பு கர்டர்களை கொண்டது. பாலத்தின் ஆயுட்காலம் 58 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. பாலத்தின் நடுவே அமைக்கப்பட்டிருக்கும் செங்குத்து தூக்குப் பாலம் நாட்டிலேயே முதல் செங்குத்துத் தூக்குப்பாலம் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய பாம்பன் ரயில் பாலத்தில் ரயில்கள் சோதனை ஓட்டம், செங்குத்து தூக்குப் பாலத்தை தூக்கி இறக்கும் சோதனைகள் நிறைவடைந்து கடந்த நவம்பர் மாதம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அவற்றைச் சரிசெய்த பின்னரே ரயிலை இயக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். தற்போது, அவர் சுட்டிக்காட்டிய பணிகளும் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறப்பதற்கான ஆயத்தப் பணிகள் நேற்று தொடங்கின. பாம்பன் கடலில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ரயில் பாலத்தில் உள்ள செங்குத்து தூக்குப்பாலமும், பழைய ரயில் பாலமும் ஒருசேர தூக்கப்பட்டு, வடக்கே பாக் நீரிணை கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான ரோந்துப்படகு மன்னார் வளைகுடா கடற்பகுதிக்கு கடந்து சென்றது.
அதைத்தொடர்ந்து, பாம்பன் புதிய ரயில் பாலத்தின் செங்குத்து தூக்குப் பாலம் இறக்கப்பட்டு பயணிகள் இன்றி 22 காலி பெட்டிகளுடன் ரயில் என்ஜின் மண்டபத்திலிருந்து ராமேசுவரத்துக்குப் பாலம் வழியாக இயக்கி சோதனை செய்யப்பட்டது.
பின்னர், மீண்டும் செங்குத்து தூக்குப் பாலம் தூக்கப்பட்டு வடக்கே மன்னார் வளைகுடா கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதே கடலோர காவல்படையின் ரோந்துப் படகு மீண்டும் பாக் நீரிணைக் கடற்பகுதியைக் கடந்து சென்றது.
அதுபோல, மீண்டும் பாம்பன் செங்குத்துத் தூக்குப்பாலம் மூடப்பட்டு ராமேசுவரத்தில் இருந்து பயணிகள் இன்றி 22 காலி பெட்டிகளுடன் ரயில் என்ஜின் மண்டபம் நோக்கி இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, "புதிய பாம்பன் ரயில் பாலத்தின் திறப்பு விழா விரைவில் நடைபெறும். பிரதமர் நரேந்திர மோடி பாலத்தை திறந்து வைப்பார். இதற்கான தேதியை ரயில்வே அமைச்சகம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். இதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது தொடங்கி உள்ளன. பழைய பாம்பன் ரயில் பாலத்தை தக்கவைத்துக் கொள்வதா அல்லது அகற்றுவதா என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்" என தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment