Last Updated : 31 Jan, 2025 06:24 PM

 

Published : 31 Jan 2025 06:24 PM
Last Updated : 31 Jan 2025 06:24 PM

பிப்.12-ல் கூடுகிறது புதுச்சேரி சட்டப் பேரவை - ‘காகிதமில்லா’ முன்னெடுப்புக்கு பயிற்சி!

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப் பேரவை வரும் பிப்.12-ல் கூடுகிறது என்றும், மாநில நலனுக்கு எதிராக இருக்கும் எந்த அதிகாரியாக இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சட்டப் பேரவையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ''15-வது புதுச்சேரி சட்டப் பேரவையின் 5-வது கூட்டத் தொடர் கடந்த ஆண்டு ஜூலை 3-ம் தேதி கூட்டப்பட்டு, 2024-25-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்கிய கூட்டத்தொடர் 11 நாட்கள் நடைபெற்றது. தொடர்ந்து 15-வது சட்டப்பேரவையின் 5-வது கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி வருகின்ற பிப்.12-ம் தேதி காலை 9.30 மணி அளவில் பேரவைக் கூடத்தில் கூட்டப்படுகிறது. மேலும் 2024-2025 நிதியாண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான சட்ட முன்வரைவு வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட இருக்கிறது.

புதுச்சேரி சட்டப்பேரவை காகிதமில்லா பேரவையாக மாற்றும் விதமாக ரூ.8.16 கோடிக்கு மின்னணு உள்கட்டமைப்பு மேம்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. இதற்காக சட்டப்பேரவையின் எம்எல்ஏக்கள் இருக்கைகள் அருகில் அவர்களுக்கான தொடுதிரை கணினி அமைக்கப்பட்டு வருகிறது. வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முழுமையாக காகிதமில்லாத சட்டப்பேரவையாக செயல்படும். எம்எல்ஏக்கள், சட்டப்பேரவை செயலகத்தின் அதிகாரிகள் அனைவருக்கும் அதற்கான பயிற்சி அளிக்கப்படும்'' என்றார்.

அப்போது புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடந்த மாநாட்டில் தனியார் பள்ளி மாணவர்கள் சைக்கோவாக உருவாகின்றனர் என்று பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், ''தனியார் பள்ளி மாணவர்கள் முடித்த பின்னர் பணிபுரியும் வேலையில் சைக்கோவாக உருவாகின்றனர் என்று அவர்களின் மனநிலையையே நான் உதாரணமாக குறிப்பிட்டு பேசினேன். அது மாற்றி பேசப்படுகிறது. எந்த பள்ளியையும் குறிப்பிட்டு கூறவில்லை, பொதுவாகவே கூறினேன்'' என்று தெரிவித்தார்.

தொடர்ந்து திட்டக்குழு கூட்டத்தில் அதிகாரிகளை கடுமையாக விமர்சித்து பேசியது குறித்து கேட்டபோது, ''எந்த திட்டத்தின் கோப்புகளாக இருந்தாலும் ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார். எப்படி சட்டப்பேரவை காகிதமில்லா பேரவையாக விளங்குகின்றதோ, அதுபோன்று இ-பைல் சிஸ்டம் மூலம் அரசுத் துறைகளில் கோப்புகளுக்கு எளிதாக ஒப்புதல் பெறுவது தொடர்பாக அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நடைமுறையை அதிகாரிகள் பயன்படுத்துவதில்லை.

ஒரு கோப்புக்கு ஒப்புதல் அளிக்க 2, 3 மாதங்கள் காலதாமதமாகின்றது. உடனடியாக ஒப்புதல் அளிப்பதில்லை. இலவச அரிக்கான கோப்பு கடந்த செப்டம்பர் மாதம் அனுப்பப்பட்டது. ஆனால் ஜனவரியில் தான் ஒப்புதல் பெறப்பட்டது. அதாவது 5 மாதங்கள் அந்த கோப்பு சுற்றியது. புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக அனுப்பப்படும் கோப்புகளை காலதாமதம் செய்யக் கூடாது என்பதற்காகத்தான் அரசு ஊழியர்களை விமர்சித்து பேசினேன். மாநில நலனுக்கு எதிராக இருக்கும் எந்த அதிகாரியாக இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். தொகையை அதிகப்படுத்தவும், சில திட்டங்களுக்காகவும் துணைநிலை ஆளுநர், முதல்வர் ஆலோசித்து விவரங்களை கேட்டுள்ளனர். அதனால் தான் திட்டக்குழு கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை தொகை இறுதி செய்யப்படவில்லை'' என்றார்.

துணைநிலை ஆளுநர், முதல்வர் இடையே இணக்கமான புரிதல் உள்ளது. திட்டக்குழு கூட்டத்தில் நிதிநிலை அறிக்கைக்கான தொகை இறுதி செய்யப்பட சுயேட்சை எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை தலைவரான உங்கள் மீது கொடுத்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுமா என்று கேட்டதற்கு, ''சட்டப்பேரவை விதிகளுக்கு உட்பட்டு வந்தால் கண்டிப்பாக எடுத்துக்கொள்வோம்'' என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x