Published : 31 Jan 2025 02:43 PM
Last Updated : 31 Jan 2025 02:43 PM
சென்னை: விசிக முன்னாள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளராக இருந்த நிர்மல் குமார் ஆகியோர் இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளராக இருந்த நிர்மல் குமார், விசிகவின் முன்னாள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்துக்கு இன்று வந்தனர். அவர்கள் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். தவெகவில் 3 துணை பொதுச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆதவ் அர்ஜுனா பதவி குறித்த அறிவிப்போடு, புது நிர்வாகிகள் நியமனம் பற்றிய அறிவிப்பும் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தவெகவில் ஆதவ் அர்ஜுனா இணைவது ஏற்கெனவே உறுதியான நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, அதிமுக நிர்வாகியாக இருந்த நிர்மல் குமாரும் தவெக பக்கம் தாவியுள்ளார். இது கட்சி தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராக இருந்த நிர்மல் குமார், கடந்த 2023-ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், சீமானின் சர்ச்சைப் பேச்சு காரணமாக, நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் பலரும் கூண்டோடு விலகி வரும் நிலையில், அவர்கள் தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாக பனையூர் வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆதவ் அர்ஜுனா இணைந்ததன் பின்புலம்: தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலை இலக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் கட்சி அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தேர்தலுக்கு 14 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணியில் கட்சி தலைவர் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
சென்னையில் விசிக முன்னாள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் ‘வாய்ஸ் ஆப் காமன்’ நிறுவனம் சார்பில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் பேசிய ஆதவ் அர்ஜுனா, விஜய்க்கு ஆதரவாக பேசியதுடன், திமுகவை எதிர்த்து கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தார். திமுகவுடனான கூட்டணியில் இருந்துகொண்டே விமர்சனங்களை முன்வைத்ததால் விசிகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். பின்னர் கட்சி பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்தார்.
இதற்கிடையே தவெகவின் அரசியல் ஆலோசகராக இருந்துவரும் ஜான் ஆரோக்கியசாமி, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தவெக குறித்து பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் 2 சதவீதம் வாக்குகள் கூட தவெக பெறாது என்று அவர் பேசியிருந்ததாக கூறப்படுகிறது. இதையொட்டி ஜான் ஆரோக்கியசாமியை நீக்கிவிட்டு, ஆதவ் அர்ஜுனாவை தவெகவின் அரசியல் ஆலோசகராக நியமிப்பதற்கான பணிகள் கடந்த ஒரு மாத காலமாகவே நடைபெற்று வருவதாக கூறப்பட்டு வந்தது. இந்தப் பின்னணியில், சமீபத்தில் தவெக தலைவர் விஜய்யை அவரது வீட்டில் சந்தித்துப் பேசியதன் தொடர்ச்சியாக, தவெகவில் இணைந்திருக்கிறார் ஆதவ் அர்ஜுனா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment