Published : 31 Jan 2025 06:32 AM
Last Updated : 31 Jan 2025 06:32 AM

தமிழக வேளாண் துறைக்கு கூடுதல் தலைமை செயலர் அந்தஸ்தில் அதிகாரி: முதல்வருக்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்

சென்னை: வேளாண் துறைக்கு கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்திலான அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசில் வேளாண் துறைச் செயலராக உள்ள அபூர்வா ஓய்வு பெறவுள்ளார். இந்நிலையில், புதிய செயலரைத் தேர்வு செய்ய தமிழக அரசு முயற்சித்து வருகிறது.

மத்திய அரசின் கொள்கை அடிப்படையில், நிதி, உணவு, நீர்ப்பாசனம், கூட்டுறவு, வருவாய், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் வகையில் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் செயலர் நியமிக்கப்படுகிறார்.

ஏற்கெனவே, வேளாண் உற்பத்தி ஆணையர் பதவி மூத்த ஐஏஎஸ் அதிகாரிக்கு தனி பதவியாக வழங்கப்பட்டு வந்தது. வேளாண் துறைக்கான செயலர் தனியாக நியமிக்கப்பட்டார். பிறகு மாற்றம் கொண்டுவரப்பட்டு, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் செயலர் நியமிக்கும் வழக்கத்தை அரசு பின்பற்றி வருகிறது.

இந்நிலையில் நிதி, உணவு, நீர்ப்பாசனம், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்திலான செயலர்கள் நியமிக்கப்படும்போது, வேளாண் துறைக்கு செயலர் நிலையில் அதிகாரி நியமிப்பது நிர்வாக ரீதியாக ஏற்றத்தாழ்வுகளையும், தாமதங்களையும் உருவாக்கும். அவசரகாலமாக சில திட்டங்களை சம்பந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்து நிறைவேற்றும்போது காலதாமதம், தடைகள், ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவது வழக்கம்.

மேலும், வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்திலான அதிகாரி ஒருவரை நியமிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். அல்லது வேளாண் உற்பத்தி ஆணையாளர் பதவிக்கு தனி உயர் அதிகாரியை நியமிக்க வேண்டும்.

வேளாண் கொள்கைகளும் மத்திய அரசை சார்ந்துள்ள நிலையில், மத்திய அரசின் உயர் அதிகாரிகளுக்கு இணையான அதிகாரியை நியமிக்க வேண்டும். தகுதி, திறமையின் அடிப்படையில் நியமனம் செய்வதை முதல்வர் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT   ( 1 Comments )
  • C
    Chandra_USA

    இந்தியா இனி விவசாயப் பொருளாதாரம் அல்ல. அரசு மானியம் இல்லாமல் இந்திய விவசாயிகளுக்கு எப்படி பணம் சம்பாதிப்பது என்று தெரியவில்லை.it is a value destroyer.

 
x
News Hub
Icon