Published : 31 Jan 2025 06:10 AM
Last Updated : 31 Jan 2025 06:10 AM
சென்னை: சென்னை மாநகராட்சியில் கால்நடைகள் மற்றும் செல்லப் பிராணிகள் வளர்ப்பை முறைப்படுத்த நாய் மற்றும் மாடுகளுக்கு மைக்ரோ சிப் பொருத்த அனுமதி அளித்து மாமன்ற கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய நிலைக்குழு தலைவர்கள், நிலைக்குழு கூட்டத்தில் மாநகராட்சி உயரதிகாரிகள் பங்கேற்பதில்லை என புகார் தெரிவித்தனர். அதற்குப் பதில அளித்த மேயர், நிலைக்குழு கூட்டங்களில் உயரதிகாரிகள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, பிராட்வே பேருந்து நிலையத்தை ராயபுரம் இப்ராஹிம் சாலையில் உள்ள துறைமுக பொறுப்பு கழகத்துக்கு சொந்தமான 14,014 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்துக்கு மாற்ற நிர்ணயிக்கப்பட்ட ஓராண்டு குத்தகை தொகை ரூ.3.94 கோடி, வைப்புத்தொகை ரூ.7.89 கோடி செலுத்த அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப கட்டிடங்களுக்கு, சிறப்பு வகை கட்டிடமாக கருதி, அவற்றுக்கு சொத்துவரியை உயர்த்த கடந்த 2013-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. கடந்த 2023-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் அமலுக்கு வந்த நிலையில், அதில் கட்டிடங்களை குடியிருப்பு, குடியிருப்பு அல்லாத வணிகக் கட்டிடம் என மட்டுமே வகைப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, தகவல் தொழில்நுட்ப கட்டிடங்களுக்கு உயர்த்தி நிர்ணயிக்கப்பட்ட சொத்து வரி குறித்த தீர்மானம் ரத்து செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ரிப்பன் மாளிகை வளாகத்தில் ரூ.75 கோடியில் புதிய மன்ற கூட்ட அரங்கம் கட்ட, அரசிடம் நிர்வாக அனுமதி பெறவும், ரூ.11.49 கோடியில் நவீன 3டி மாடல் நிழற்குடைகளை 81 இடங்களில் அமைக்கும் பணியை, தெரிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரரிடம் வழங்கவும், குப்பை வாகனங்களை ஜிபிஎஸ் கருவி பொருத்தி கண்காணிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் செல்லப் பிராணிகளின் வளர்ப்பை முறைப்படுத்த, பிரத்யேக மென்பொருளை உருவாக்கி, நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தவும், மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் நவீன மாட்டு கொட்டகைகளில் அடைக்கப்படும் மாடுகளுக்கும் மைக்ரோ சிப் பொருத்தவும், அந்த கொட்டகைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்ட செயல்முறைகளுக்கும் மன்ற கூட்டத்தில் அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்றைய கூட்டத்தில் மொத்தம் 112 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...