Published : 31 Jan 2025 03:21 AM
Last Updated : 31 Jan 2025 03:21 AM
கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் கைத்தறி, துணி நூல் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோ-ஆப்டெக்ஸ், தேசிய அளவில் முன்னணி கைத்தறி நிறுவனமாக உள்ளது. தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் 150 இடங்களில் இதன் விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன. இங்கு தொழில்நுட்பம், நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம் உயர்த்தப்படுகிறது. கடைசியாக, கடந்த 2018-ம் ஆண்டில் ஊதிய உயர்வு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு, ஊதியத்தை உயர்த்துமாறு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு 15 சதவீதம் முதல் ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம், வீட்டு வாடகைப் படி, நகர ஈட்டுப் படி மாற்றம் தொடர்பாக கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநரின் பரிந்துரையை பரிசீலிக்குமாறு, அரசுக்கு கைத்தறி இயக்குநர் வேண்டுகோள் விடுத்தார். இதை பரிசீலித்த அரசு, கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்த முடிவு செய்தது. இதையடுத்து, ஊதியம், வீட்டு வாடகைப் படி, நகர ஈட்டுப்படி ஆகியவை மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, கோ-ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகம், மண்டல அலுவலகம், விற்பனை நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அதாவது அலுவலக உதவியாளர் முதல் தலைமை பொது மேலாளர் வரை 10 நிலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஊதிய நிலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு ஊழியர்களுக்கு நிகராக வீட்டு வாடகைப் படி, நகர ஈட்டுப் படியும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம் 2023 ஜூலை 1-ம் தேதியில் இருந்து முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு மூலம் 15 முதல் 40 சதவீதம் வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதாக கோ-ஆப்டெக்ஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...