Published : 31 Jan 2025 01:09 AM
Last Updated : 31 Jan 2025 01:09 AM
வேலூர்: பெண் மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் உட்பட 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் மருத்துவர், தனது சக மருத்துவருடன் 2022 மார்ச் 16-ம் தேதி இரவு காட்பாடியில் உள்ள திரையரங்கில் இரவுக் காட்சி முடிந்து, ஆட்டோவில் வேலூருக்குச் சென்றுள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அதில் இருந்தவர்கள் இருவரையும் கத்தி முனையில் பாலாற்றங்கரைக்கு கடத்திச் சென்று, ஆண் மருத்துவரைத் தாக்கிவிட்டு, பெண் மருத்துவரைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
மேலும், ஆண் மருத்துவரிடம் இருந்து பறித்த ஏடிஎம் கார்டைப்பயன்படுத்தி ரூ.40 ஆயிரத்தை எடுத்துள்ளனர். இருவரிடம் இருந்த செல்போன், தங்கச்சங்கிலியையும் பறித்துக்கொண்டு, அடுத்த நாள் அதிகாலை இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் சொந்த மாநிலமான பிஹார் சென்று, அங்கிருந்து வேலூர் எஸ்.பி.யின் மின்னஞ்சல் முகவரிக்குப் புகார் அனுப்பினார். அதன்பேரில், வேலூர் வடக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து, சத்துவாச்சாரியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபன் (20), பரத் (18), மணிகண்டன் (21), சந்தோஷ்குமார் (22) மற்றும் 17 வயது 6 மாதங்கள் நிரம்பிய சிறுவன் என 5 பேரைக் கைது செய்தனர்.
இதில், சிறுவனைத் தவிர மற்றவர்கள் மீதான வழக்கு வேலூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. சிறுவன் மீது சென்னையில் உள்ள இளம் சிறார் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. வழக்கை விசாரித்த வேலூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி பானுரேகா, குற்றம் சுமத்தப்பட்ட பார்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ்குமார் ஆகியோருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் சந்தியா ஆஜரானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...