Published : 31 Jan 2025 12:36 AM
Last Updated : 31 Jan 2025 12:36 AM

புதுக்கோட்டை சமூக ஆர்வலர் உடலை தோண்டியெடுத்து எக்ஸ்ரே எடுக்க உத்தரவு: நீதிமன்றம் சொன்னது என்ன?

புதுக்கோட்டையில் படுகொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலைத் தோண்டியெடுத்து, எக்ஸ்ரே எடுக்கவ வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வெங்கலுரைச் சேர்ந்த மரியம் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் ஜகபர் அலி. சுற்றுச்சூழல் ஆர்வலரான அவர், சட்டவிரோதக் குவாரிகளுக்கு எதிராகப் போராடியதால் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் கடந்த 18-ம் தேதி பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

ஆனால், தடய அறிவியல் விதிகளைப் பின்பற்றி பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை. எலும்பு முறிவுகள் தொடர்பாக எக்ஸ்ரே எடுக்கப்படவில்லை. பிரேதப் பரிசோதனை தொடர்பான வீடியோ பதிவு கோரிய எங்களின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. 10 நாட்கள் தாமதத்துக்குப் பிறகு பிரேதப் பரிசோதனை சான்றிதழை வழங்கினர்.

இது தொடர்பாக தடயவியல் நிபுணர்களுடன் ஆலோசித்தபோது, முதலில் நடைபெற்ற பிரேதப் பரிசோதனை உரிய விதிகளைப் பின்பற்றி நடத்தப்படவில்லை என்பது தெரியவந்தது. வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டாலும், முதல் தகவல் அறிக்கை நகல் வழங்கவில்லை. விசாரணையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. இதனால், விசாரணை சரியான பாதையில் செல்லுமா என்ற சந்தேகம் உள்ளது.

எனவே, எனது கணவர் உடலைத் தோண்டியெடுத்து, பேராசிரியர் தகுதிக்குக் குறையாத இரண்டு தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் எங்கள் தரப்பில் ஒரு தடய அறிவியல் நிபுணரை இணைத்து, புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் எடுக்கவும், மறு பிரேதப் பரிசோதனை நடத்தவும், அதை வீடியோவாகப் பதிவு செய்யவும், பிரேதப் பரிசோதனை நடந்த அன்றே சான்றிதழ் மற்றும் வீடியோ பதிவு நகல் வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், பிரேதப் பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் ஆஜராகி, "மனுதாரரின் கணவர் இறப்புக்கு லாரி ஏறியதால் ஏற்பட்ட எலும்பு முறிவுகளும், உள் உறுப்புகளில் ஏற்பட்ட காயமுமே காரணம்" என்றார்.

இதையடுத்து நீதிபதி, "லாரி ஏறியதில் ஏற்பட்ட எலும்பு முறிவும், காயமுமே இறப்புக்குக் காரணம் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது உடலைத் தோண்டி ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே எடுக்க வேண்டிய அவசியம் என்ன? இதை அரசியலுக்காகவும், விளம்பரத்துக்காகவும் பயன்படுத்த நேரிடலாம்" என்றார்.

அரசு தரப்பில், "வழக்கு பதிவதில் காலதாமதம் செய்த காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குடும்ப நபர்களிடம் கையொப்பம் பெற்றே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. ஜகபர் அலி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே எக்ஸ்ரே செய்யலாம்" எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி, "ஜகபர் அலி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே உடலை எக்ஸ்ரே எடுப்பதற்குத் தேவையான தொழில்நுட்பக் கருவிகள், மருத்துவர் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களை புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனை முதல்வர் ஏற்பாடு செய்ய வேண்டும். திருமயம் வட்டாட்சியர் முன்னிலையில், போலீஸ் பாதுகாப்புடன் ஜகபர் அலி உடலை எக்ஸ்ரே எடுக்க வேண்டும். அங்கு ஊடகங்களை அனுமதிக்கவோ, செல்போனில் புகைப்படம் எடுக்கவோ அனுமதிக்கக் கூடாது. எக்ஸ்ரே நடவடிக்கைகள் முழுவதும் வீடியோ செய்யப்பட்டு, விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கையை விரைவில் முடிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x