Published : 30 Jan 2025 09:25 PM
Last Updated : 30 Jan 2025 09:25 PM
மதுரை: “மேலூர் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் சட்டப்பேரவைத் தீர்மானத்தால் ரத்து செய்யப்படவில்லை. மண்ணின் மைந்தர்களின் அழுகைக்காக டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்தது” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.
மேலூர் அ.வள்ளாலப்பட்டியில் டங்ஸ்டன் திட்ட ரத்து பாராட்டு விழாவில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது: “பிரதமர் மோடி தமிழகத்துக்கு எதிராக எந்த திட்டத்தையும் எப்போதும் கொண்டு வரமாட்டார். அது அவர் ரத்தத்திலேயே இல்லை. தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு முந்தைய மத்திய அரசு கையெழுத்திட்டது. இத்திட்டம் குறித்து பாஜக அரசு வந்ததும் விவசாயிகள் தெரிவித்தனர். திட்டம் ரத்து செய்யப்பட்டது.
அதேபோல் தான் டங்ஸ்டன் திட்டமும், மேலூர் எப்படிப்பட்ட பகுதி என்பது மத்திய அரசுக்கும், மத்திய அரசு செயலர்களுக்கும் தெரியாது. யாரும் இங்கு வந்து பார்க்கவில்லை. மேலூரில் எந்தளவு பாசனம் நடைபெறுகிறது. கள்ளழகர் கோயில் உட்பட 250 கோயில்கள், 2 ஆயிரம் ஆண்டு பழமையான சமணர் படுகைகள் உட்பட தமிழர் பாரம்பரிய சுவடுகள் இருப்பது தெரியாது. இதை தெரியப்படுத்த வேண்டியது நமது கடமை.
மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கம் இருப்பதாக மாநில அரசுக்கு கடிதம் எழுதுகிறது. 2023-ல் டங்ஸ்டன் ஏலம் விடப்போவது தொடர்பாக மாநில அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது இப்பகுதியில் 477 ஏக்கர் பரப்பளவில் மட்டும் பல்லுயிர் பூங்கா இருப்பதாக தெரிவித்தது. எஞ்சிய பகுதியில் விவசாயம், கோயில், நீர்ப்பாசனம் இருப்பது பற்றி யாரும் சொல்லவில்லை. இதனால் டெண்டர் விடப்பட்டது. டெண்டர் எடுக்கப்பட்ட பிறகு தான் இந்த விபரங்கள் எல்லாம் தெரியவந்தது.
மேலூர் மக்கள் இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு அறவழிப் போராட்டம் நடத்தினர். 12 அம்பலக்காரர்கள் டெல்லியில் மத்திய அமைச்சரை சந்தித்து திட்டத்தை கைவிட கோரிக்கை வைத்தனர். பத்து பேர் சேர்ந்தாலே என்ன நடக்குமோ என்ற அச்சம் இருக்கும் நிலையில் பல லட்சம் மக்கள் மேலூரிலிருந்து மதுரைக்கு சென்று தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்த அறவழிப் போராட்டத்தை பார்த்த பிறகு திட்டத்தை ரத்து செய்யாமல் இருப்பாரா பிரதமர் மோடி?
மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தை ரத்து செய்வது சுலபமல்ல. அப்படியிருக்கும் நிலையில் இந்த மண் மக்கள் கையை விட்டு போகக்கூடாது என்பதற்காக திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்தது. தமிழக மக்களுடன் கலந்திருப்பவர் பிரதமர் மோடி. ஜல்லிக்கட்டை திரும்ப கொண்டு வந்தார். என்ன பிரச்சினை என்றால் பாஜகவில் ஊடகம் இல்லை. சூரியன் உதயமாவது, மறைவது எல்லாம் மாநில அரசால் நடைபெறுகிறது என பிரச்சாரம் செய்கின்றனர். நாங்கள் பேசமாட்டோம். செய்வோம்.
பாஜகவினர் பாராட்டு விழாவுக்கு எங்கும் செல்வதில்லை. அம்பலக்காரர்கள் எங்களை சந்தித்த போது, எங்களுக்கு டெல்லியில் மரியாதை செய்தீர்கள். அதனால் நீங்கள் எங்கள் ஊருக்கு வர வேண்டும் என்றனர். இதையேற்று நாங்கள் வந்துள்ளோம். நாங்கள் எங்கள் கடமையை செய்துள்ளோம். மோடி எப்போதும் தமிழகம் பக்கம் இருப்பார் என்பதை மறுபடியும் உணர்த்தியுள்ளார்.
இங்கு அரசியல் பேசக்கூடாது. இங்கு முதல்வர் ஸ்டாலின் சில விஷயங்களை பேசியுள்ளார். அதற்கு நான் பதில் சொல்லியாக வேண்டும். சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதால் திட்டம் ரத்தாகவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். சட்டப்பேரவையில் தீர்மானம் போடுவது மட்டும் தான் இவர்களின் வேலை. மண்ணின் மைந்தர்களின் அழுகைக்காக டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்துள்ளோம்.
மாநில அரசு மிரட்டியதால் திட்டத்தை ரத்து செய்ததாக பேசுகின்றனர். எந்த மிரட்டலுக்கும் மோடி பயப்படமாட்டார். உலக நாடுகளின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி வரும் பிரதமர் மோடி, யாருக்கும் பயப்படமாட்டார். மக்களின் அன்புக்காக வந்துள்ளோாம். மக்களின் அன்புக்காக மோடி அரசு என்ன வேண்டுமானாலும் செய்யும். மேலூர் மக்கள் 11 ஆயிரம் பேர் மீது வழக்கு போட்டு விட்டு, திட்டம் ரத்தான பிறகும் வழக்கை ரத்து செய்யாமல், அதன் பிறகு ரத்து செய்துவிட்டு எங்களால் திட்டம் ரத்தானது என்றால் எப்படி ஏற்க முடியும்.
காமராஜர் ஆட்சியை விட்டு வெளியே வரும் போது மேலூர் பகுதியில் 70 லட்சம் ஹெக்டேரில் விவசாயம் நடைபெற்று வந்தது. இப்போது 46 லட்சம் ஹெக்டேரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. எஞ்சிய 24 லட்சம் ஹெக்டேர் காணாமல் போய்விட்டது. இதற்கு மாநில அரசு முயற்சி எடுத்து அணை கட்ட வேண்டும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும். இளைஞர்களை விவசாயம் பக்கம் திரும்ப வேண்டும்.
இளைஞர்களை கிராமங்களில் தங்க வையுங்கள். மேலூர் பகுதி 20 ஆண்டுக்கு முன்பு எப்படி பச்சை பசேலாக இருந்ததோ, அதே போல் பச்சை பசேலாக இருக்க வேண்டும் என்பதற்காக திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எங்கள் வேலையை நாங்கள் செய்துள்ளோம். இப்பகுதியை பாதுகாக்க பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இதை மாநில அரசு தான் செய்ய முடியும். இப்பகுதியில் இன்னும் 20 தலைமுறைகள் விவசாயம் சார்ந்த குடும்பங்கள் வாழ வேண்டும் என்றால் அதை செய்தால் மட்டுமே முடியும்.
அ.வள்ளாலப்பட்டி மண்ணில் இருந்து நாங்கள் சொல்லித்தான் திட்டத்தை ரத்து செய்தார்கள் என்று சொல்ல, தமிழகத்துக்கு போஸ்ட்மேன் தேவையில்லை. அதை பாஜகவே செய்யும். தொடர்ந்து மக்களுக்காக பாஜகவினர் உயிரை கொடுத்து உழைப்பார்கள். எப்போதும் மத்திய அரசு மீது சந்தேகப்படாதீர்கள். தவறு நடந்தால் சுட்டிக்காட்டுங்கள் 10 நாளில் சரி செய்வோம். மத்திய அரசு மீது நம்பிக்கை வையுங்கள். தோழனாக, அண்ணனாக இருப்பார் மோடி.
ஒரு பிரச்சினை என்றால் மத்திய அரசு ஓடோடி வரும் என்ற செய்தி உலக மக்களுக்கு மேலூரிலிருந்து சென்றுள்ளது. ஒரு பிரச்சினையை எப்படி அணுக வேண்டும் என்பதை உலகம் முழுவதும் மக்கள் சொல்லிக்கொடுத்துள்ளனர். இதற்காக மக்களின் பாதம் தொட்டு நன்றி தெரிவிக்கிறோம். இவ்வாறு அண்ணாமலை பேசினார். | வாசிக்க >
“தமிழக மக்களிடம் ‘தேசியம்’ கொள்கை...” - 'டங்ஸ்டன் ரத்து’க்கான பாராட்டு விழாவில் கிஷன் ரெட்டி பேச்சு
- கி.மகாராஜன் / சுப.ஜனநாயகசெல்வம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...