Last Updated : 30 Jan, 2025 01:50 PM

 

Published : 30 Jan 2025 01:50 PM
Last Updated : 30 Jan 2025 01:50 PM

இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் கோரி வழக்கு: நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கோப்புப் படம்

மதுரை: திருவாதவூர் இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் கோரிய வழக்கில், முகாமின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை திருமால்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம் திருவாதவூர் இலங்கை அகதிகள் முகாமில் 555 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த குடும்பங்களில் 943 ஆண்கள், 800 பெண்கள் 289 குழந்தைகள் என 2000-க்கும் அதிகமானோர் உள்ளனர். இவர்கள் கடந்த 2002-ம் ஆண்டு முதல் மிகச் சிறிய அளவிலான ஆஸ்பெட்டாஸ் போட்ட வீடுகளில் வசித்து வருகின்றனர். தற்போது 520-க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடந்துள்ளது. முழுமையாக மின்சாரமும் வழங்கப்படுவதில்லை. இதனால் முதியவர்களும், நோயாளிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

முகாமில் 20 கழிவறைகள் தான் உள்ளது. இது இங்குள்ள 2000 நபர்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால் ஏராளமானவர்கள் திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்தும் கட்டாயம் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் பெண்கள் வெளியே செல்கையில் தேவையற்ற பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே திருவாதவூர் அகதிகள் முகாமில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியான கான்கிரீட் வீடு, கழிவறை வசதியோடு கட்டி தரவும், பொதுக் கழிவறை, முறையான சாலை வசதி, தெரு விளக்கு வசதி, முழுமையான மின்சார விநியோகம் என அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ. டி.மரிய கிளாட் அமர்வு, தமிழக மறுவாழ்வுத்துறை முதன்மைச் செயலர், புலம்பெயர்ந்தோர் நல வாரியத்தின் ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் திருவாதவூர் அகதிகள் முகாமின் தற்போதைய நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x