Published : 30 Jan 2025 01:35 PM
Last Updated : 30 Jan 2025 01:35 PM

கும்பமேளா உயிரிழப்புகளுக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும்: செல்வப்பெருந்தகை

செல்வப்பெருந்தகை | கோப்புப்படம்

சென்னை: “கும்பமேளா உயிரிழப்புக்கு பொறுப்பேற்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியிலிருந்து விலகுவாரா? பெரும்பான்மை இந்து மதத்தினரின் சமய சடங்குகளை எப்படி அரசியல் ஆதாயமாக்குவது என்பது தான் பாஜகவின் உள்நோக்கமாக நீண்டகாலமாக இருந்து வருகிறது. இத்தகைய கவனக்குறைவு காரணமாக அப்பாவி மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இதற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மவுனி அமாவாசை தினத்தையொட்டி மகாகும்பமேளாவில் புனித நீராட ஒரே நேரத்தில் 10 கோடி பக்தர்கள் திரண்டதால் ஜனவரி 29-ம் தேதி அதிகாலை பயங்கர நெரிசல் ஏற்பட்டு 30-க்கும் மேற்பட்டோர் பலியான சோக நிகழ்வு நடந்துள்ளது. அறுபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாகும்பமேளா ஜனவரி 13-ல் தொடங்கி பிப்ரவரி 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறுகிற நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினால் மோட்சத்துக்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்கள் திரண்டதால் இத்தகைய பேரிழப்பு நிகழ்ந்திருக்கிறது.

இந்த பேரிழப்புக்கு முக்கிய காரணம் உத்தரப்பிரதேச மாநில அரசின் அரைகுறையான, அலட்சியமான நிர்வாக குறைபாடு என்று கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உத்தரப்பிரதேச அரசு 12 மணி நேரம் காலம் தாழ்த்தி அறிவித்தது பல சந்தேங்களை எழுப்பியுள்ளது. பலியானோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை கண்டுபிடிக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது.

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியவை சங்கமிக்கும் ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் குளித்துவிட வேண்டுமென்பதே அனைவரின் முயற்சியாக இருந்திருக்கிறது. உத்தரப்பிரதேச அரசாங்கம் அளித்த தகவலின் அடிப்படையில் ஜனவரி 29-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு தொடங்கி 8 மணிக்குள் புனித நீராடுவதற்கு உகந்த நேரம் என்று கூறப்பட்டதால் கோடிக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் அங்கே நீராட முற்பட்டிருக்கிறார்கள்.

அரசு தகவலின்படியே 2 கோடியே 8 லட்சம் மக்கள் நீராடியதாக கூறப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட இடத்தில் விஐபி-க்கள் நிரம்பி வழிந்ததால் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் கவனம் முழுவதும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. பிரபல மடாதிபதிகள் நூற்றுக்கணக்கானோர் தங்கள் படை பரிவாரங்களுடன் அங்கு சென்றுள்ளனர். இவை தவிர, பண்டைய அரச குடும்பத்தைச் சார்ந்தவர்கள், தற்போதைய மத்திய - மாநில பாஜக அமைச்சர்கள், பாஜக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அவர்களின் குடும்பங்கள் எனும் பெரும் பட்டாளங்களும், உத்தரப்பிரதேச அரசின் அரவணைப்பில் விவிஐபி விருந்தினர்களாக புனித நீராடலுக்கு சென்றுள்ளனர்.

அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து புனித நீராடுவதற்கு காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் காட்டிய அக்கறை கோடிக்கணக்கான ஏழை மக்கள் புனித நீராடுவதில் காட்டப்படவில்லை. சாதாரண மக்கள் தங்களுக்கு எங்கு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்வதற்கே பல மணி நேரம் அலைந்து திரிந்துள்ளனர். பல இடங்களில் காவல்துறை அவர்களுக்கு அனுமதி மறுத்து வெவ்வேறு பாதையில் பயணிக்க கட்டளையிட்டுள்ளனர். அவ்வாறு சென்ற இடத்திலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இறுதியாக பொதுமக்கள் பொறுமையிழந்து பாதுகாப்பு தடுப்புகளை உடைத்து, நொறுக்கி குளியல் பகுதிக்கு முன்னேறி சென்றுள்ளனர். உள்ளே நுழைபவர்கள், வெளியேறுபவர்கள் இருவருக்கும் என ஒரே பாதை என்கிற நிலையில் தான் தள்ளுமுள்ளு மற்றும் நெரிசல் ஏற்பட்டு பலர் தடுமாறி கீழே விழுந்து, அவர்களை பலபேர் மிதித்து பலர் உயிரிழக்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய மனித உயிரிழப்புக்கு யார் காரணம் ? யார் பொறுப்பு ?கோடிக்கணக்கான மக்களை கும்பமேளாவில் புனிதநீராட திரட்டுவதிலே இருந்த அரசியல் உள்நோக்கம் என்ன ? மக்கள் தங்கள் நம்பிக்கையில் இயல்பாக, அமைதியாக நடைபெற வேண்டிய புனித நீராடலை முறையாக கட்டுப்படுத்தி நடத்தாமல் இத்தகைய மனித இழப்பு ஏற்பட்டதற்கு யார் காரணம் என்பதை நாட்டு மக்கள் அறிய விரும்புகிறார்கள்.

மகா கும்பமேளாவில் நேற்று நடந்த பேரழிவை போல கடந்த காலங்களில் பலமுறை நடந்திருக்கிறது. 1954-ல் நடந்த கும்பமேளாவில் 500 பேர் இறந்தனர். அதற்கு பிறகு 2013 மகா கும்பமேளாவில் 36 பக்தர்கள் அலகாபாத் ரயில் நிலைய நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இப்படிப்பட்ட பேரழிவுகளிலிருந்து உத்தரப்பிரதேச அரசு பாடம் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை.1950-களில் அரியலூர் ரயில் விபத்து ஏற்பட்ட போது, அன்றைய மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி அந்த விபத்துக்கு
பொறுப்பேற்று பதவியிலிருந்து விலகினார்.

இன்றைய கும்பமேளா உயிரிழப்புக்கு பொறுப்பேற்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியிலிருந்து விலகுவாரா? பெரும்பான்மை இந்து மதத்தினரின் சமய சடங்குகளை எப்படி அரசியல் ஆதாயமாக்குவது என்பது தான் பாஜகவின் உள்நோக்கமாக நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின்படி மக்களின் கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தி அதில் அரசியல் ஆதாயம் தேடுவது தான் பாஜகவின் ஒரே நோக்கமாக இருந்ததனால் கும்பமேளாவில் கூடுகிற கோடிக்கணக்கான பக்தர்களுக்கு தேவையான வசதிகளையும், ஏற்பாடுகளையும் செய்வதில் அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டுள்ளனர்.

இத்தகைய கவனக்குறைவு காரணமாக அப்பாவி மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இதற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும். இத்தகைய பேரிழப்புகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x