Published : 30 Jan 2025 12:10 PM
Last Updated : 30 Jan 2025 12:10 PM

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

ராமதாஸ் | கோப்புப்படம்

சென்னை: “தமிழகத்தில் இப்போது கடைபிடிக்கப்பட்டு வரும் விதிகளின்படி மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50% வழங்கப்பட்டது போக மீதமுள்ள 50% மாநில ஒதுக்கீட்டு இடங்கள் முழுக்க முழுக்க தமிழக மாணவர்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. உச்ச நீதிமன்றம் இப்போது அளித்திருக்கும் தீர்ப்பின்படி, மாநில ஒதுக்கீட்டுக்கான 50% இடங்களில் சேர வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் எவரேனும் விண்ணப்பித்தால் அவர்களுக்கும் தகுதி அடிப்படையில் மாணவர் சேர்க்கை வழங்கப்பட வேண்டும். அதனால், தமிழக மருத்துவர்களுக்கு இடம் கிடைக்கும் வாய்ப்புகள் குறையும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் வசிப்பிட அடிப்படையிலான ஒதுக்கீடுகள் எதுவும் கூடாது என்றும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்தவர்களுக்கும் இடம் அளிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தமிழ்நாடு போன்ற வலுவான மருத்துவக் கல்வி கட்டமைப்பு கொண்ட மாநிலங்களின் மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கை இடங்களை பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தாரை வார்க்க இந்த சட்டம் வழிவகை செய்யும். இது மாநில உரிமைகளுக்கு எதிரானது.

சண்டிகர் நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 64 மருத்துவ மேற்படிப்பு இடங்களில் சண்டிகர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் அல்லது அந்த குறிப்பிட்ட கல்லூரியில் இளநிலை மருத்துவம் படித்த மாணவர்கள் மட்டுமே சேர முடியும் என்று அறிவிக்கப்பட்டது செல்லாது என்ற பஞ்சாப் - ஹரியானா மாநில உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் இந்தத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.

“நாம் அனைவரும் இந்தியாவில் தான் வசிக்கிறோம். நாம் அனைவரும் இந்தியாவில் வசிப்பாளர்கள் தான். இந்தியக் குடிமக்கள் அல்லது வசிப்பாளர்கள் என்ற பொதுப் பிணைப்பு இந்தியாவின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வாழ்வதற்கும், வணிகம் செய்வதற்கும் உரிமை அளிப்பதைப் போன்று இந்தியாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாணவர்சேர்க்கை கோரும் உரிமையையும் வழங்குகிறது. அதனால் வசிப்பிட அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது” என்று நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு அளித்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் இப்போது கடைபிடிக்கப்பட்டு வரும் விதிகளின்படி மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50% வழங்கப்பட்டது போக மீதமுள்ள 50% மாநில ஒதுக்கீட்டு இடங்கள் முழுக்க முழுக்க தமிழக மாணவர்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. உச்ச நீதிமன்றம் இப்போது அளித்திருக்கும் தீர்ப்பின்படி, மாநில ஒதுக்கீட்டுக்கான 50% இடங்களில் சேர வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் எவரேனும் விண்ணப்பித்தால் அவர்களுக்கும் தகுதி அடிப்படையில் மாணவர் சேர்க்கை வழங்கப்பட வேண்டும். அதனால், தமிழக மருத்துவர்களுக்கு இடம் கிடைக்கும் வாய்ப்புகள் குறையும்.

தமிழகம் மிகவும் வலிமையான மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. அதற்குத் தேவையான மருத்துவர்களை உருவாக்கி வழங்கும் மையங்களாக மருத்துவக் கல்லூரிகள் திகழ்கின்றன. தமிழகத்துக்கு எந்த அளவுக்கு முதுநிலை மருத்துவர்கள் தேவையோ, அதற்கேற்ற வகையில் தான் மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அந்த இடங்களிலும் வெளி மாநிலத்தவருக்கு பங்கு அளிக்கப்பட்டால் தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளுக்கு போதிய மருத்துவர்கள் கிடைக்காத நிலை ஏற்படும். அதனால், தமிழகத்தின் அரசு மருத்துவமனைகள் செயல்படாமல் முடங்கும் நிலை உருவாகும்.

இந்தியா ஒற்றை நாடு என்ற தத்துவத்தின் அடிப்படையில் தான் அனைத்து மாநிலங்களின் மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் 15% இடங்களையும், மருத்துவ மேற்படிப்பில் 50% இடங்களையும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநில அரசுகள் வழங்குகின்றன. அவை போக மீதமுள்ள இடங்களும் இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்? இந்த நிலை உறுதி செய்யப்பட்டால் இந்தியாவில் எந்த மாநில அரசும் மருத்துவக் கல்லூரிகளை தொடங்க ஆர்வம் காட்டாது. அது மருத்துவக் கல்வி வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்து தத்துவார்ந்த வாதங்களுக்கு பொருந்துமே தவிர, மாநில மக்களின் நலன்களைக் காப்பதற்கும், நடைமுறைக்கும் பொருந்தாது. இந்தியா ஒற்றை நாடு என்றாலும், அது பல வகையான கலாச்சாரங்களைப் பின்பற்றக் கூடிய, பல மொழிகளைப் பேசக் கூடிய மக்கள் வாழும் மாநிலங்களின் ஒன்றியம் ஆகும். அதனால் தான் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநிலத்தின் தேவைகளும் அந்த மாநிலங்களில் வாழும் மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிகளைக் கொண்டு நிறைவேற்றப்படுகின்றன.

ஒற்றை நாடு என்ற தத்துவத்தின் அடிப்படையில் ஒரு மாநிலத்தில் வசூலிக்கப்படும் வரி மூலம் கிடைக்கும் வருவாய் இன்னொரு மாநிலத்துக்கு வழங்கப்படுவதில்லை. அதே நேரத்தில் அனைத்து மாநில மக்களின் குறைந்தபட்சத் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக மத்திய அரசு நேரடியாக மருத்துவக் கல்லூரிகளை நடத்துகிறது. மாநில அரசு கல்லூரிகளில் இருந்து குறிப்பிட்ட அளவு இடங்களைப் பெற்று அகில இந்திய ஒதுக்கீட்டை ஏற்படுத்துகிறது. அந்த இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கும் கருத்துகளின்படி தான் நடைபெறுகிறது. இத்ததைய சூழலில் மாநில ஒதுக்கீட்டு இடங்களின் மாணவர் சேர்க்கைக்கும் அகில இந்திய தத்துவத்தைத் திணிக்கக் கூடாது.

அனைத்து மாநிலங்களின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய தீர்ப்புகளை வழங்குவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்துகளும் கேட்கப்பட வேண்டும். ஆனால், இந்த வழக்கில் அத்தகைய நடைமுறை பின்பற்றப்படவில்லை. மருத்துவப் படிப்புகளில் தமிழ்நாடு மாநில ஒதுக்கீட்டுக்கான இடங்கள் பறிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. எனவே, உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் மாநிலங்களின் உரிமைகளைக் காக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15-ம் பிரிவில் உரிய திருத்தங்களை மேற்கொள்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.”என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x