Last Updated : 30 Jan, 2025 09:09 AM

2  

Published : 30 Jan 2025 09:09 AM
Last Updated : 30 Jan 2025 09:09 AM

மூவாயிரத்தை வைத்து என்ன செய்வது? - கஷ்ட ஜீவனத்தில் மொழிப்போர் தியாகிகளின் குடும்பங்கள்!

சின்னச்சாமியின் மனைவி, மகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் அமைச்சர் கணேசன்...

“மொழிப்போர் தியாகிகளின் புகழ் ஓங்கட்டும்” என்று இந்த ஆண்டு மொழிப்போர் தியாகிகள் தினத்தில் ஒங்கிச் சொல்லி இருக்கிறார் திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின். ஆனால் மொழிப்போர் தியாகிகளை ஆண்டு தவறாமல் நினைவுகூரும் அரசு, அவர்களின் குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றன அந்தத் தியாகிகளின் குடும்பங்கள்.

மொழிப்போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளை போற்றும் விதமாக தமிழகத்தில் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. திமுக, அதிமுக, மதிமுக, விசிக ஆகிய கட்சிகள் மொழிப்போர் தியாகிகளை மறக்காமல் போற்றி வருகின்றன. இந்தி திணிப்புக்கு எதிராக போராடி சிறை சென்ற தாளமுத்துவும், நடராஜனும் சிறையிலேயே உயிரிழந்தவர்கள்.

அதன் தொடர்ச்சியாக 1964-ல் நடைபெற்ற மொழிப் போராட்டத்தில், அண்ணாவின் பேச்சாற்றலால் ஈர்க்கப்பட்ட அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் சின்னச்சாமி மொழியைக்காக்க முதன் முதலில் தீக்குளித்து உயிரிழந்தார். இதன் பிறகு தான் மாநிலம் முழுவதும் கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்துக்கிடையே கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சிவலிங்கம், அரங்கநாதன் ஆகியோரும், அவர்களைத் தொடர்ந்து முத்து, சாரங்கபாணி, வீரப்பன் ஆகியோரும் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டனர்.

இப்படி, மொழிக்காக உயிர் கொடுத்த, போராடிய தியாகிகளின் குடும்பத்தினருக்கு திமுக ஆட்சியில் தொடக்கத்தில் மாதம் ரூ.100 ஓய்வூதியம் வழங்கப்பட்டது. பிறகு இது படிப்படியாக உயர்த்தப்பட்டு இப்போது ரூ.3,000 வழங்கப்படுகிறது. இதை வைத்து என்ன செய்வது, முதுமையில் வாடும் தங்களின் மருத்துவச் செலவுக்குக்கூட இந்தப் பணம் போதவில்லை என்கிறார்கள் தியாகிகளின் மனைவி உள்ளிட்ட வாரிசுகள்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் பேசிய கீழப்பழுவூர் சின்னச்சாமியின் மனைவி கமலம், “அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்கும் முன்பாக எனது கணவரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, ‘தீங்கு தரும் இந்தியை எதிர்த்து தீக்குளித்த தீரன் திமுக-காரன்’ என்ற அடைமொழியிட்டு அவரை வணங்கிய பிறகே ஆட்சிப் பொறுப்பேற்றார். எனது கணவர் இறக்கும் போது அவருக்கு வயது 26; எனக்கு 21 வயது.

எங்கள் மகள் திராவிடச் செல்விக்கு 2 வயது. கணவர் இல்லாத நிலையில் ஒரு பெண் பிள்ளையை வைத்துக்கொண்டு போராட்ட வாழ்க்கை நடத்தினேன். கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் தான் எங்களுக்கு ரூ.100 மாத ஓய்வூதியம் வழங்கினார். பின்னர் எம்ஜிஆர் ஆட்சியில் ஓய்வூதியம் நின்று போனது.

மீண்டும் 1989-ல் ஆட்சிக்கு வந்த கலைஞர், எங்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.250 ஆக உயர்த்தினார். இப்போது ரூ.3,000 வழங்கப்படுகிறது. கடந்த 2022-ல் அரியலூருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வந்த முதல்வர் ஸ்டாலின், எங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கினார். அந்த இடத்தில் எங்களுக்கு வீடுகட்டித் தருவதாக அமைச்சர் சிவசங்கர் சொல்லி இருக்கிறார். விருத்தாசலத்தில் எனது மகள் திராவிடச் செல்வியுடன் வசித்து வருகிறேன். கணவரை இழந்த என் மகளுக்கு ஏதாவது அரசு வேலை கேட்டோம்.

ஆனால், அவருக்கு திருமணமாகிவிட்டதால் அதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லி விட்டார்கள். மகளின் தையல் மெஷின் தான் எங்களுக்கு இப்போது சோறு போடுகிறது. கணவரோடு மொத்தமே நான் வாழ்ந்தது 5 ஆண்டுகள் தான். அவரது நினைவுகளுடன் 61 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கடந்த ஆண்டு உதயநிதி எங்கள் வீட்டுக்கு வந்து எங்களைப் பார்த்துச் சென்றது ஆறுதலாக இருந்தது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவரது மகள் திராவிடச் செல்வி, “அமைச்சர் கணேசனும் எங்களுக்கு அவ்வப்போது நிதியுதவி அளிப்பார் இந்த ஆண்டு அப்பாவின் நினைவுநாளில் எங்களை அவரது வீட்டுக்கு அழைத்து ரூ.1 லட்சம் தந்ததுடன் எனது பெயரில் வீட்டுமனைப் பட்டாவும் வழங்கினார். முதுமை காரணமாக, அடிக்கடி அம்மாவுக்கு மருத்துவச் செலவு ஏற்படுகிறது. அரசு மருத்துவமனைக்குச் செல்லவேண்டுமென்றால் கூட ஆட்டோவுக்கு ரூ.300 முதல் 500 வரை செலவாகிறது. ஆனாலும், நாங்கள் சுயமரியாதையை இழக்க மாட்டோம்.

எனது உடலில் தெம்பிருக்கும் வரை அம்மாவை நான் காப்பாற்றுவேன்” என்றார். ஆண்டு தோறும் மொழிப்போர் தியாகிகளை நினைவுகூர்வதை ஒரு சம்பிரதாய சடங்காகப் பார்க்காமல் அந்த தியாகிகளின் குடும்பங்கள் நிலையறிந்து அவர்களுக்கான உதவிகளைச் செய்வதுதான் அந்த தியாகிகளுக்கு அரசும், கட்சிகளும் செய்யும் உண்மையான மரியாதையாக இருக்க முடியும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x