Published : 30 Jan 2025 08:42 AM
Last Updated : 30 Jan 2025 08:42 AM

ஆவடி அரசியல் ஒத்து வராது... மீண்டும் விருதுநகருக்கே திரும்பிய மாஃபா பாண்டியராஜன்!

ஜெயலலிதாவின் குட்புக்கில் குறுகிய காலத்தில் இடம்பிடித்தவர் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். அதனால் தான் அவரை ஆவடியில் நிற்கவைத்து அமைச்சராக்கினார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் பக்கம் நின்ற மாஃபா, பிறகு எடப்பாடி பக்கம் வந்தார்.

அண்மைக்காலமாக ஆர்ப்பாட்டமில்லாமல் இருக்கும் மாஃபா, பாஜக-வில் இணையப் போவதாகக்கூட செய்திகள் கசிந்தன. ஆனால், அந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டவர், சென்னை அரசியலை விட்டு மீண்டும் சொந்த ஊரான விருதுநகர் மாவட்ட அரசிலுக்கு திரும்பி இருக்கிறார்.

2009-ல் விருதுநகரில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய மாஃபா பாண்டிய​ராஜன், 2009 மக்களவைத் தேர்தலில் தேமுதிக வேட்பாளராக தனித்து நின்று சுமார் 1.25 லட்சம் வாக்கு​களைப் பெற்றார். அதன் பிறகு 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்ட​ணியில் தேமுதிக வேட்பாளராக விருதுநகரில் போட்டி​யிட்டு வெற்றி பெற்றார். 2013-ல், விஜயகாந்​துக்கும் ஜெயலலி​தாவுக்கும் இடையில் மோதல் வெடித்த சமயத்தில் தேமுதிக எம்எல்​ஏ-க்கள் 9 பேர் அதிமுக ஆதரவு நிலைப்​பாட்டை எடுத்​தார்கள். அவர்களில் ஒருவர் மாஃபா.

அந்த 9 பேரில் மாஃபா பாண்டிய​ராஜனுக்கு மட்டுமே 2016 தேர்தலில் வாய்ப்​பளித்த ஜெயலலிதா, அமைச்​சர​வை​யிலும் இடமளித்​தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் பக்கம் நின்ற ஒரே அமைச்சர் மாஃபா மட்டும் தான். அதனாலேயே 6 மாதத்தில் அமைச்சர் பதவியை இழந்தார்.

அதன் பிறகு மீண்டும் அணிகள் ஒன்றானபோது மீண்டும் அமைச்​ச​ரா​னார். ஆனால், 2021-ல் மீண்டும் ஆவடியில் போட்டி​யிட்ட இவரால் கரையேற முடிய​வில்லை. மீண்டும் அதிமுக-வில் ஓபிஎஸ் - இபிஎஸ் பிளவு வெடித்தபோது இபிஎஸ் பக்கமே நின்று கொண்டார் மாஃபா.

ஆனால், ஓபிஎஸ் பக்கம் போய் வந்தவர் என்பதால் மாஃபாவுக்கு கட்சிக்குள் பழைய முக்கி​யத்துவம் இல்லாமல் போனது. இதனால் அரசியல் நடவடிக்கைகளை ஒதுக்​கி​ வைத்து​விட்டு தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பித்​தார். மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியை எதிர்​பார்த்​தார்.

ஆனால், தொகுதி தேமுதி​க-வுக்குப் போனதால் அதுவும் கைகூட​வில்லை. தளராத மாஃபா, தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் களமிறங்க வியூகம் வகுத்து வருவதாக அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். இதுகுறித்து பேசிய அவர்கள், ” முதன் முதலில் தனக்கு வெற்றிக் கணக்கைத் தந்த விருதுநகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்பதற்காக இப்போது விருதுநகரில் அரசியல் செய்கிறார் மாஃபா.

மக்களவைத் தேர்தலில் இவருக்கு சீட் கிடைத்து​விடக் கூடாது என்பதற்​காகவே இவர் பாஜக-வில் இணையப் போவதாக வதந்தி​களைப் பரப்பி​னார்கள். இம்முறை பழையபடியே தேமுதிக கூட்ட​ணியும் இருப்​பதால் வாய்ப்புக் கிடைத்தால் விருதுநகரை நிச்சயம் வென்றெடுப்​பார்” என்றார்கள்.

மாஃபா பாண்டிய​ராஜனிடம் கேட்டதற்கு, “கடந்த இரண்டு ஆண்டுகளாக விருதுநகரில் தங்கி களப்பணி ஆற்றி வருகிறேன். மனித வள மேம்பாட்டு நிறுவனத்தின் கிளையை தொடங்கி இளைஞர்​களுக்கு பயிற்சி அளித்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம்.

மாஃபா அறக்கட்டளை சார்பில் விருதுநகர் தொகுதியைச் சேர்ந்த 100 மாணவர்​களுக்கு கல்விச்​செலவு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்​பட்டு வருகிறது. கட்சித் தலைமை அளிக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கட்சிக்​கும், மக்களுக்கும் பணியாற்று​வேன்” என்றார். மாஃபா-வின் மறு வருகையை ராஜேந்திர பாலாஜி மாதிரி​யானவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்களோ தெரியவில்​லையே!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x