Published : 30 Jan 2025 06:36 AM
Last Updated : 30 Jan 2025 06:36 AM
சென்னை: 2047-ம் ஆண்டுக்கு முன்பாகவே இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்று சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். சென்னை அன்னம் அசோசியேட்ஸ் சார்பில் தொழிலதிபர் சுப்பு சுந்தரம் எழுதிய ‘காசி கும்பாபிஷேகம்’நூல் வெளியீட்டு விழா மயிலாப்பூர் பாரதியவித்யா பவனில் நேற்று நடந்தது.
இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு நூலை வெளியிட, முதல் பிரதியை ‘துக்ளக்' ஆசிரியர்எஸ்.குருமூர்த்தி, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்.எல்.சுந்தரேசன், ஸ்ரீகிருஷ்ணா சுவீட்ஸ் உரிமையாளர் எம்.முரளி, ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், ‘இந்து’ என்.ரவி உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.
பழம்பெருமை, கலாச்சாரம் மீட்பு: இவ்விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் ஆன்மிக நகரமாக காசி திகழ்ந்து வருகிறது. அது இன்றும் தனது மகிமையைத் தக்க வைத்துக்கொண்டு வருகிறது. காசி நகரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வசித்து வருகின்றனர்.
காசிக்கும் தமிழகத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. நமது பாரதம் ரிஷிகளால் உருவாக்கப்பட்ட தேசம். பாரம்பரியமும், கலாச்சாரமும் மிகுந்த பாரத தேசத்தை சனாதன தர்மம்தான் இன்றளவும் பாதுகாத்து வருகிறது. இடையே காலனியாதிக்கத்தால் பாரதம் சிதைவுக்கு ஆளானது. ஆனால் தற்போது மீண்டும் தனது பழம்பெருமையையும், பாரம்பரியத்தையும், கலாச்சாரத் தையும் மீட்டு வருகிறது.
பிரதமர் மீது மக்கள் நம்பிக்கை: பிரதமர் மோடி தலைமையிலான உறுதியான ஆட்சியால் வளர்ச்சியை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி மீது இந்திய மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது உலக அளவிலான பொருளாதாரத்தில் 6-வது இடத்தில் இருக்கும் பாரதம் விரைவில் 3-வது இடத்துக்கு முன்னேறும். 2047-ம் ஆண்டில் பாரதம் வளர்ந்த நாடாக, தற்சார்பு கொண்ட நாடாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. என்னைப் பொருத்தவரை, 2047-ம் ஆண்டுக்கு முன்பாகவே பாரதம் வளர்ந்த நாடாக மாறும். அதற்கான வளர்ச்சிகளைக் காண முடிகிறது. இவ்வாறு ஆளுநர் பேசினார்.
ஐஐடி இயக்குநர் காமகோடி வாழ்த்திப் பேசும்போது, ‘‘தமிழகம் எப்படி காசிக்கு உதவியது என்பதை இந்நூல் விளக்குகிறது. காசிக்கும் தமிழகத் துக்கும் இடையேயான தொடர்பு மேலும் வளர வேண்டும்’’ என்றார். ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பேசுகையில், ‘‘தொன்று தொன்று நகரத்தார் சமூகம் ஆன்மிக பணிகளுக்கு பெரிதும் உதவியுள்ளது. ஆன்மிகம் குறைந்ததால் நகரத்தார் சமூகத்துக்கு சரிவு ஏற்பட்டது. அவர்களின் சரிவுக்கு திராவிடம் காரணம்’’ என்றார். முன்னதாக நூலாசிரியர் சுப்பு சுந்தரம் ஏற்புரையாற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...