Published : 20 Jul 2018 09:10 PM
Last Updated : 20 Jul 2018 09:10 PM
ராமேசுவரம் அருகே இலங்கையைச் சேர்ந்த தமிழ் போராளிக்குழுக்களால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதக் குவியல்களைப் பாதுகாப்பான முறையில் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை அப்புறப்படுத்தினர்.
ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் ஊராட்சி அந்தோணியார்புரத்தைச் சேர்ந்த மீனவர் எடிசன் என்பவர் வீட்டுத் தோட்டத்தில் கடந்த ஜூன் 25 அன்று கழிவு நீர் கால்வாய் கிணறு அமைப்பதற்காக தொழிலாளர்களைக் கொண்டு தோண்டியபோது இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்றபோது தமிழகத்தில் பயிற்சி பெற்ற இலங்கையைச் சேர்ந்த தமிழ் ஈழப் போராளிக்குழுக்களால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதக் குவியல் கண்டெடுக்கப்பட்டது.
ஆயுதக் குவியலிலிருந்து 5,500 எல்என்ஜி ரக துப்பாக்கி குண்டுகள், 4,928 எஸ்எல்ஆர் ரக துப்பாக்கி குண்டுகள், 400 இயந்திரத் துப்பாக்கி குண்டுகள், டெட்டனேட்டர்களை வெடிக்கச் செய்யும் சிலாப் 199, ராக்கெட் லான்சர் பொறிகள் 20, கையெறி குண்டுகள் 15, வயர் ரோல்கள் 8, கன்னி வெடிகள் 2, எக்ஸ்புளோசிவ் மோட்டார் 1 ஆகியன கண்டெடுக்கப்பட்டன.
ஆயுதக் குவியல்களில் வெடிக்கும் தன்மைகளைக் கொண்டவற்றை மட்டும் எடிசன் வீட்டுத் தோட்டத்தில் ஆயுதக் குவியல் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகே குழி தோண்டி அதில் தண்ணீர் நிரப்பி பாதுகாப்பாக புதைத்து வைக்கப்பட்டது. அந்தப் பகுதிக்கு யாரும் செல்லாமல் இருக்க துப்பாக்கி ஏந்திய போலீஸார் இரவுப் பகலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகள் மற்றும் வெடிக்கும் சக்தியை இழந்த ஆயுதங்களை மட்டும் ராமநாதபுரம் ஆயுதப்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும் வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு காவல்துறையினரால் எடிசனின் வீடு மற்றும் சுற்றிலும் உள்ள பகுதிகளில் ஆய்வு செய்து மேலும் வேறு எங்கும் ஆயுதங்கள் இல்லை என்பதை உறுதி செய்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை ஆயுதக்குவியல்கள் கண்டெடுக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் எடிசன் தனது வீட்டுத் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதக் குவியல்களை அகற்றி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்று செயலிழக்கவோ, அல்லது அழிக்கவோ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததுடன் தங்கச்சிமடம் அந்தோணியார் புரத்திலுள்ள தனது வீட்டிலிருந்து தமது உடமைகளை எடுத்துக்கொண்டு காலி செய்தார். இதனைத் தொடர்ந்து ரமேசுவரம் நீதித்துறை நடுவர் (பொறுப்பு) பாலமுருகன் தங்கச்சிமடம் அந்தோணியார்புரத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதக் குவியல்களைப் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த புதன்கிழமை உத்தரவிட்டார்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி, ராமேசுவரம் நீதித்துறை நடுவர் (பொறுப்பு) பாலமுருகன் ஆகியோர் முன்னிலையில் தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் எடிசன் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதக்குவியல்களை வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு காவல்துறையினரால் அகற்றி சிவகங்கை மாவட்டம் மேலூரில் உள்ள ஆயுதக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.
25 நாட்கள் கழித்து ஆயுதக் குவியல்கள் அப்புறப்படுத்தப்பட்டதால் தங்கச்சிமடம் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
'காஷ்மோரா' படத்தில் நடிக்க விரும்பினேன்: விஜய் சேதுபதி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT