Published : 30 Jan 2025 06:10 AM
Last Updated : 30 Jan 2025 06:10 AM

சென்னையில் ஆட்டோக்​களுக்கு பிப்.1 முதல் புதிய மீட்டர் கட்டணம் - முழு விவரம்

சென்னை: சென்னையில் புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண விகிதப்படி பிப்.1-ம் தேதி முதல் ஆட்டோக்களை இயக்க முடிவு செய்துள்ளதாக ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதேநேரம் செல்போன் செயலி வழியாக சேவை வழங்கும் முன்னணி தனியார் நிறுவனங்களின் கீழ் இனி ஆட்டோ, கால் டாக்ஸிகளை இயக்கமாட்டோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அ.ஜாஹிர் ஹூசைன் கூறியதாவது: சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2013-ம் ஆண்டு 1.8 கி.மீ.க்கு ரூ.25-ம், கூடுதல் கி.மீ.க்கு ரூ.12-ம் ஆட்டோ மீட்டர் கட்டணம் நிர்ணயித்தது. இந்நிலையில் இந்த கட்டணத்தை மாற்றி அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நாங்களும் மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்ட தயாராக இருக்கிறோம். ஆனால் இதுவரை தமிழக அரசு ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்கவில்லை.

எனவே தமிழக அரசு ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்கும் வரை சென்னையில் புதிய கட்டணத்தை நிர்ணயித்துள்ளோம். இது வரும் பிப்.1-ம் தேதி முதல் அமலாகிறது. இதன்படி குறைந்தபட்ச கட்டணமாக 1.8 கி.மீ.க்கு ரூ.50 நிர்ணயித்துள்ளோம்.

கூடுதல் கி.மீ.க்கு ரூ.18-ம், 5 நிமிடத்துக்கு மேலான காத்திருப்புக் கட்டணமாக நிமிடத்துக்கு ரூ.1.50-ம் வசூலிக்க அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை பகல் நேர கட்டணத்தில் 50 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

மேலும் தமிழகத்தில் செல்போன் செயலி வழியாக ஆட்டோ, கால் டாக்ஸி சேவைகளை வழங்கிவரும் தனியார் நிறுவனங்கள், ஓட்டுநர்களிடம் இருந்து சுமார் 25 சதவீதம் வரை கமிஷனாக எடுத்துக்கொள்கின்றன. விபத்துக் காப்பீடு வசதியும் தருவதில்லை. இதை ஏற்க முடியாது. எனவே சென்னையில் வரும் பிப்.1 முதல் இந்த நிறுவனங்களில் ஆட்டோ, கால் டாக்ஸிகளை இயக்கமாட்டோம்.

மேலும் அதேபோல செல்போன் செயலி வழி சேவை வழங்கும் வேறு சில நிறுவனங்கள் ஒரு நாள் சந்தாவாக ஆட்டோக்களுக்கு தலா ரூ.25, ரூ.35-ம், கால் டாக்ஸிகளுக்கு ரூ.45, ரூ.75-ம் வசூலிக்கின்றன. இதன்மூலம் வாடிக்கையாளர் செலுத்தும் தொகை எங்களுக்கு முழுமையாக கிடைக்கிறது. எனவே இந்த நிறுவனங்களுக்கு மட்டுமே ஆட்டோ, டாக்ஸிகளை இயக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த புதிய ஆட்டோ கட்டண நிர்ணயத்துக்கும், தனியார் நிறுவனங்களை புறக்கணிக்கவும் சென்னையில் 80 சதவீதம் ஓட்டுநர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. கட்டணம் உயர்த்துவது குறித்த முடிவுகள் அரசின் பரிசீலனையில் உள்ளது.

ஆட்டோ சங்கங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்த முடியாது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தால், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புகார் அளிக்கலாம்” என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x