Published : 30 Jan 2025 03:26 AM
Last Updated : 30 Jan 2025 03:26 AM
சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 100-வது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி எப்-15 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. அதில் அனுப்பப்பட்ட வழிகாட்டுதல் பயன்பாட்டுக்கான என்விஎஸ்-02 செயற்கைக்கோள் திட்டமிட்டபடி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
இந்தியாவின் தரை, கடல் மற்றும் வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்கு உதவும் ‘இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு’-ஐ (ஐஆர்என்எஸ்எஸ்) உருவாக்க இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக ரூ.1,420 கோடி செலவில் ஐஆர்என்எஸ்எஸ் 1ஏ, 1பி, 1சி, 1டி, 1இ, 1எப், 1ஜி என 7 செயற்கைக்கோள்கள் 2013 முதல் 2016-ம் ஆண்டு வரையான காலக்கட்டங்களில் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. இதன்மூலம் இந்தியாவுக்கு பிரத்யேக வழிகாட்டியாக நாவிக் தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நாவிக் மூலம் நாட்டின் கண்காணிப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ஐஆர்என்எஸ்எஸ் திட்டத்தில் பழுதான, ஆயுட்காலம் முடிந்த செயற்கைக் கோள்களுக்கு மாற்றாக வேறு ஒன்றை அனுப்பி பணிகளை தொடருவது அவசியமாகும். ஏனெனில், 7 செயற்கைக்கோள்களும் சிக்கலின்றி இயங்கினால் மட்டுமே அதன் பலன்களை நாம் முழுமையாக பெறமுடியும். அந்தவகையில் ஐஆர்என்எஸ்எஸ் வரிசையில் 1ஏ-வுக்கு மாற்றாக 1ஐ செயற்கைக்கோள் 2018-ம் ஆண்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. அதேபோல், ஐஆர்என்எஸ்எஸ் 1ஜி-க்கு பதிலாக என்விஎஸ்-01 செயற்கைக்கோள் 2023 மே 29-ல் விண்ணில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஐஆர்என்எஸ்எஸ் 1-இ-க்கு மாற்றாக அதிநவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட என்விஎஸ்-02 செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எப்-12 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது.
இதற்கான 27.30 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி ராக்கெட் நேற்று காலை 6.23 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. தரையில் இருந்து புறப்பட்ட 19 நிமிட பயணத்துக்கு பின்னர் 322 கி.மீ. உயரத்தில் திட்டமிடப்பட்ட புவிவட்டப் பாதையில் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் பெங்களூர் ஹசன் மையத்தின் கட்டுப்பாட்டில் என்விஎஸ்-2 வந்தது. இனி இது பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ தூரமும், அதிகபட்சம் 36,577 கி.மீ தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றிவரும்.
என்விஎஸ் செயற்கைக்கோள் 2,250 கிலோ எடை உடையது. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். இதில் எல்1, எல்5, சி மற்றும் எஸ் பேண்ட் டிரான்ஸ்பான்டர்கள், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான ரூபிடியம் அணு கடிகாரம் உட்பட பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் இடம் பெற்றுள்ளன. இதன்மூலம் இடமறிதல், வழிகாட்டுதல், நேரம் ஆகிய தகவல்களை சிறப்பாக பெற முடியும். இது மற்ற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும். மேலும்,ஜிபிஎஸ்போல் செல்போன் செயலி வழியாக ஓரிடத்தின் தகவல்கள், வழித்தடங்கள் அளித்தல், பேரிடர் மேலாண்மை போன்ற அவசர சேவைகள், இணைய மற்றும் நேரச் சேவைகள் உள்ளிட்ட வசதிகளுக்கும் பயன்படும்.
இது இஸ்ரோவின் 100-வது ராக்கெட்டாகும். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2 ஏவுதளங்களில் இருந்து மட்டும் மொத்தம் 100 ராக்கெட்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 91 வெற்றி பெற்றுள்ளன. நாவிக் செயற்கைக்கோள்கள் மூலமாக நாட்டின் 1,500 கி.மீ பரப்புடைய தெற்காசியப் பகுதிகளின் கடல் மற்றும் எல்லைப்பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மலைப் பகுதிகள், பாலைவனங்கள் போன்ற தகவல்தொடர்பு வசதியற்ற பகுதிகளில் ஜிபிஎஸ் முழுமையான தகவல்களை தராது. ஆனால், தெற்காசிய எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் 20 மீட்டர் தூரத்துக்கு துல்லியமான தகவல்களை நாவிக் தொழில்நுட்பம் வழங்கும். நாவிக் திட்டத்துக்காக இன்னும் என்விஎஸ் வரிசையில் 3 செயற்கைக்கோள்கள் இந்தாண்டுக்குள் செலுத்தப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment