Published : 30 Jan 2025 03:12 AM
Last Updated : 30 Jan 2025 03:12 AM
கோவை அருகே மேட்டுப்பாளையத்தில், மாற்றுச் சமூகப்பெண்ணை காதல் திருமணம் செய்த இளைய சகோதரர் மற்றும் அவரது மனைவியை வெட்டிக் கொன்ற வழக்கில், அண்ணணுக்கு தூக்கு தண்டனை விதித்து கோவை பட்டியலின மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலுள்ள, சீரங்கராயன் ஓடையைச் சேர்ந்தவர் கனகராஜ். கூலித் தொழிலாளி. அதே பகுதியில் வசித்து வந்தவர் வர்ஷினிபிரியா. இவர் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் காதலித்தனர். இவர்களது காதலுக்கு கனகராஜின் அண்ணன் வினோத்குமார் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இருப்பினும், கனகராஜ், வர்ஷினி பிரியாவை கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். இருவரும் சீரங்கராயன் ஓடையில் உள்ள மட்டசாலையில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். தனது எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டதால், வினோத்குமார் கடும் கோபமடைந்தார். 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி வினோத்குமார் அரிவாளுடன், தம்பி கனகராஜ் வீட்டுக்குச் சென்று, அங்கிருந்த அவரையும், உடனிருந்த வர்ஷினிபிரியாவையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வினோத்குமார் உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வர்ஷினிபிரியா இருநாட்கள் கழித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வர்ஷினிபிரியாவின் தாயார் அமுதா அளித்த புகாரின் பேரில் கூட்டுச்சதி, கொலை, எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், அத்துமீறி நுழைதல் ஆகிய பிரிவுகளின் கீழ் மேட்டுப்பாளையம் போலீஸார் வினோத்குமார், அவருக்கு உடந்தையாக இருந்ததாக சின்னராஜ், கந்தவேல், ஐயப்பன் ஆகிய நால்வர் மீது வழக்குப்பதிந்தனர். மேட்டுப்பாளையம் உட்கோட்ட டிஎஸ்பி வழக்கை விசாரித்தார். தொடர்ந்து நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கு விசாரணை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள, பட்டியலின மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற அமர்வில் நடைபெற்று வந்தது. நீதிபதி விவேகானந்தன் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆஜராகி வாதாடினார். கடந்த 23-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சகோதரர் உட்பட இருவரையும் படுகொலை செய்த அண்ணன் வினோத்குமார் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. சின்னராஜ், கந்தவேல், ஐயப்பன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை விவரம் 29-ம் தேதி (நேற்று) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நேற்று தண்டனை விவரத்தை நீதிமன்றம் அறிவித்தது. முன்னதாக, புகார்தாரர், கைதானவர் உள்ளிட்டோரின் இறுதி வாதங்கள் நேற்று நடைபெற்றன. நேற்று மாலை தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அதில், இருவரையும் படுகொலை செய்த வினோத்குமாருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். தொடர்ந்து வினோத்குமார் போலீஸார் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து அரசு வழக்கறிஞர் ப.பா.மோகன் கூறும்போது, ‘‘இருவரது காதலுக்கும் வினோத்குமார் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். அதையும் மீறி திருமணம் செய்ததால், 25.06.2019 அன்று மாலை 5.30 மணிக்கு அரிவாளுடன் கனகராஜ் வீட்டுக்குள் வினோத்குமார் அத்துமீறி நுழைந்துள்ளார். பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்ணை எப்படி திருமணம் செய்யலாம், எனக்கு எப்படி திருமணமாகும் எனக்கூறி கனகராஜையும், தடுக்க வந்த வர்ஷினிபிரியாவையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இருவரும் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 23-ல் தீரப்பு வழங்கப்பட்டது. இன்று தண்டனை வழங்கப்பட்டது. இ.த.சட்டம் 448 சட்டப்பிரிவுக்கு (அத்துமீறி நுழைந்தல்) ஓராண்டு சிறை தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதமும், இ.த.சட்டம் 302 பிரிவுக்கு (கொலைப்பிரிவு) சாகும் வரை தூக்கு தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளார்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment