Published : 30 Jan 2025 03:06 AM
Last Updated : 30 Jan 2025 03:06 AM
அடுத்த 5 ஆண்டுகளில் 100 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த ஆயத்தமாகி வருவதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார்.
இஸ்ரோவின் 100-வது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி எப்-15 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அதன் பின் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது: விண்வெளி ஆய்வுத் துறையில் புதிய மைல்கல் சாதனையை இஸ்ரோ எட்டியுள்ளது. 100 ராக்கெட் திட்டங்களை சாத்தியமாக்கிய அனைவருக்கும் பாராட்டுகள். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம், சந்திரயான் 4, 5, செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் திட்டம், வெள்ளி கோள் ஆய்வுத் திட்டம் என ஏற்கெனவே ஒப்புதல் பெறப்பட்ட பல்வேறு திட்டங்களை அடுத்தடுத்து செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
அதன்படி ககன்யான் திட்டத்தில் ஆளில்லா விண்கலன்களை அனுப்பிப் பரிசோதிக்கும் 3 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. ககன்யான் விண்கலன்களை அனுப்புவதற்கான நவீன எல்விஎம்-3 ராக்கெட் தொழில்நுட்பம் ஏற்கெனவே நம்மிடம் இருக்கிறது. புதிய தலைமுறை தொழில்நுட்ப ஏவுதல் வாகனமான என்ஜிஎல்வி (Next Generation Launch Vehicle-NGLV) ராக்கெட்டை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. என்ஜிஎல்வி ராக்கெட் 91 மீட்டர் வரை உயரம் கொண்டது. தற்போதைய எல்விஎம்-3 வகை ராக்கெட்டுகள் அதன் உயரத்தில் பாதிதான். எனவே, நிலவுக்கு மனிதர்களை அனுப்பவும், விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்கவும் என்ஜிஎல்வி ராக்கெட்கள் அவசியம்.
அதேபோல், என்ஜிஎல்வி ராக்கெட் வாயிலாக 30 டன் வரையான எடை கொண்ட செயற்கைக் கோள்களை அனுப்பலாம். ஸ்ரீஹரிகோட்டாவில் இப்போது செயல்பாட்டில் உள்ள 2 ஏவுதளங்களும் என்ஜிஎல்வி ராக்கெட்டை செலுத்துவதற்கு உகந்ததாக இருக்காது. அதனால், சமீபத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்த 3-வது ஏவுதளமானது ரூ.4 ஆயிரம் கோடியில் என்ஜிஎல்வி ராக்கெட்டுகளை ஏவுவதற்கான வசதிகளுடன் அடுத்த 2 ஆண்டுகளில் அமைக்கப்படும். மேலும், குலசேகரப்பட்டினம் ஏவுதளமும் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் முழுமையாக பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.
இஸ்ரோ சார்பில் 100 ராக்கெட் திட்டங்கள் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன்மூலம் 548 உள்நாடு மற்றும் வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து அடுத்த 5 ஆண்டுகளில் 100 ராக்கெட் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
இஸ்ரோவின் புதிய தலைவராக சமீபத்தில் பதவியேற்ற தமிழகத்தைச் சேர்ந்த வி.நாராயணனின் தலைமையில் நடைபெற்ற முதல் ராக்கெட் ஏவுதல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment