Published : 30 Jan 2025 02:56 AM
Last Updated : 30 Jan 2025 02:56 AM
மைனர் பெண்ணாக இருந்தாலும் கருவை கலைக்க சம்பந்தப்பட்ட சிறுமியின் சம்மதம் முக்கியம் என தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், 29 வார கருவை கலைத்து பாதுகாக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ராணிப்பேட்டையை சேர்ந்த ஒரு பெண் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: எனது 16 வயது மகளின் வயிற்றில் கரு வளர்ந்து வருவது கடந்த ஜனவரி 7-ம் தேதிதான் எனக்கு தெரிந்தது. அப்பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருடன் ஏற்பட்ட நட்பு காரணமாக கர்ப்பம் தரித்தது தெரியவந்தது. என் மகள் தற்போது பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத வேண்டி உள்ளதால், கருவை அழிக்க அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தேன். ஆனால், அங்கு போதிய வசதிகள் இல்லை என்று கூறியதால், வேலூர் அரசு மருத்துவனையில் சேர்த்துள்ளேன். எனது மகளின் கருவை கலைக்க வேலூர் அரசு மருத்துவமனை மகப்பேறு இயல் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.செளந்தர் பிறப்பித்துள்ள உத்தரவு: மைனர் சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணமான நபர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும், 29 வார கருவை கலைக்க, சம்பந்தப்பட்ட சிறுமியின் சம்மதம் முக்கியம் என்பதால், மருத்துவமனையில் உள்ள சி்றுமியிடம் வேலூர் குற்றவியல் நடுவர் மூலமாக நேரில் வாக்குமூலம் பெற உத்தரவிடப்பட்டது. ‘‘பொதுத் தேர்வு நெருங்கும் சூழலில் கருவை வளர்க்க விரும்பவில்லை. கருவை கலைக்கவே விரும்புகிறேன்’’ என்றுதான் சிறுமியும் தெரிவித்துள்ளார். எனவே, சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உடனடியாக அகற்றி, போக்சோ வழக்கு விசாரணைக்காக கருவை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவி்ட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...