Published : 29 Jan 2025 09:41 AM
Last Updated : 29 Jan 2025 09:41 AM
இம்முறை புதுச்சேரியில் காங்கிரஸ் தயவில்லாமல் தனித்துப் போட்டியிட வேண்டும் என திமுக-வினர் பேசி வரும் நிலையில், இரண்டு கட்சிகளுக்குமான உரசலும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ் - திமுக கூட்டணி போட்டியிட்டது.
30 தொகுதிகளிலும் போட்டியிட்ட இந்தக் கூட்டணியால் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெறமுடிந்தது. திமுக 6 இடங்களை பிடித்த நிலையில் திமுக-வை விட கூடுதலான இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 2 இடங்களை மட்டுமே வென்றது. இதனால், அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியானது திமுக.
ஆளும் கட்சியாக இருந்த தங்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்துகூட கிடைக்காமல் போனதில் புதுச்சேரி காங்கிரஸாருக்கு ரொம்பவே வருத்தம். அதிலும் எதிர்க்கட்சிக்கான இடத்தை திமுக பிடித்ததில் கூடுதல் வருத்தம். இதனால் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் தொடக்கம் முதலே முட்டல் மோதல் இருந்து வருகிறது. கூட்டணிக்கு, அதிக இடங்களில் வென்ற திமுக தலைமை ஏற்பதா அதிக இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைமை ஏற்பதா என்பதிலும் குழப்பம் ஏற்பட்டது.
இதனிடையே, என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசை கடுமையாக விமர்சனம் செய்த காங்கிரஸ், போராட்டங்களையும் நடத்தியது. ஆனால், பிரதான எதிர்க்கட்சியான திமுக கொஞ்சம் அடக்கியே வாசித்தது. மாநில திமுக அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா, அரசை விமர்ச்சிப்பதிலும் போராட்டங்களை முன்னெடுப்பதிலும் மென்மையான போக்கை கடைபிடித்தார். இது காங்கிரஸ் முகாமை கடுகடுக்க வைத்தது.
இது தொடர்பான தங்களது ஆதங்கத்தை முன்னாள் முதல்வர் நாராயணசாமி அடிக்கடி பொதுநிகழ்ச்சிகளில் வெளிப்படுத்தியும் வருகிறார். சிவா குறித்தும் வெளிப்படையான விமர்சனங்களை அவர் முன்வைத்து வருகிறார். இதனால் தமிழகத்தைப் போலில்லாமல் புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி தாமரை இலை தண்ணீராக நிற்கிறது.
இந்நிலையில், சமீபத்தில், புதுச்சேரி அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்கும் வடமாநில மாணவியிடம் 4 பேர் அத்துமீறி நடந்து கொண்ட விவகாரம் அரசுக்கு எதிராக திரும்பியது. அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என பல தரப்பிலும் இருந்து இந்தச் சம்பவத்தைக் கண்டித்து கண்டனக் குரல்கள் வெடித்தன. காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
ஆனால், திமுக தரப்பில் எந்தவித போராட்டத்தையும் அறிவிக்கவில்லை சிவா. தமிழகத்தில் அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிரான ஆயுதமாக எடுத்துள்ளன. அதனால் வடமாநில மாணவி விவகாரத்தில் தலையிட்டால் அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தை நமக்கெதிராக பாஜக கூட்டணி திருப்பும் என்பதால் சிவா நாசூக்காக தவிர்த்திருக்கலாம் என்கிறார்கள்.
ஆனால், இந்த விவகாரத்தில் திமுக தலையிடாமல் ஒதுங்கியதை காங்கிரஸ் சீரியஸாக எடுத்துக் கொண்டது. இதுகுறித்து நம்மிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா, “வடமாநில மாணவி விவகாரத்தில் காங்கிரஸ் அவர்கள் எண்ணத்தின் அடிப்படையில் போராட்டம் செய்கின்றனர். அதில் நாங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. இந்த விஷயத்தில் காங்கிரஸ் அரசியல் செய்யவில்லை; அவர்களின் அரசியலை செய்கின்றனர்” என்றார்.
இதற்கு பதிலளித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமியோ, “மாணவி விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை. பெண்ணை தொட்டாலே பாலியல் வன்கொடுமை தான். பாதிக்கப்பட்ட மாணவி தாக்கப்பட்டுள்ளார். ஆகவே, எதிர்கட்சித் தலைவர் நடந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்துவிட்டு பதில் அளித்தால் நன்றாக இருக்கும்.
புதுச்சேரியில் புதிதாக 8 மதுபான தொழிற்சாலைக்கு அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வித்தயாசமின்றி அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றனர்.
நாங்கள் யாரையும் போராட்டத்துக்கு அழைக்கவில்லை. நாங்கள் எங்கள் கட்சியின் வேலையைச் செய்கிறோம். அவர்கள் அவர்களது கட்சியின் வேலையைச் செய்கின்றனர். திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோமா இல்லையா என்பதை திமுக-விடம் தான் கேட்க வேண்டும்” என்றார்.
காங்கிரசுக்கும் திமுக-வுக்கும் இடையில் நீறுபூத்த நெருப்பாக இருந்த மனஸ்தாபங்கள் மாணவி விவகாரத்தில் பகிரங்கமாகவே வெடித்திருக்கிறது. அத்துடன், புதுச்சேரி காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு 2026 தேர்தலில் தலைமையேற்கப் போவது யார் என்ற கேள்வியும் இப்போது மேலோங்கி நிற்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...