Published : 29 Jan 2025 01:13 AM
Last Updated : 29 Jan 2025 01:13 AM
யுஜிசி மூலம் மாநில பல்கலைக்கழகங்களை கைப்பற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் குற்றம் சாட்டியுள்ளார்.
யுஜிசி வரைவு அறிக்கை தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கோவி.செழியன் கூறியதாவது: யுஜிசி வெளியிட்டுள்ள வரைவு அறிக்கை மாநில உரிமையையும், மாநில கல்வி உரிமையையும் பறிப்பதாக அமைந்துள்ளது. மாநிலத்தின் அடிப்படை கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்தையும் முடக்க மத்திய அரசு சதி திட்டம் தீட்டுவது போல் தெரிகிறது. தன்னாட்சி அமைப்பான யுஜிசி மத்திய அரசின் கைப்பாவையாக உள்ளது. மாநில பல்கலைக்கழகங்களை யுஜிசி மூலம் கைப்பற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது. கல்வி பொதுப்பட்டியலில் இருந்து வரும் நிலையில் மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் யுஜிசி தனது அதிகார வரம்பை மீறியுள்ளது. இது மாநில அரசுகளுக்கு விடுக்கப்பட்ட சவால்.
யுஜிசியின் வரைவு அறிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கல்வித்துறையில் உள்ளவர்களால் தான் பல்கலைக்கழகத்தை சிறப்பாக நிர்வகிக்க முடியும். கல்வித்துறைக்கு தொடர்பு இல்லாதவர்களும், பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்தோரும் துணைவேந்தர் ஆகலாம் என்றால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். பட்டப்படிப்பில் நுழைவுமுறை, விருப்பப்பட்டால் வெளியேறும் முறை இருந்தால் அது இடைநிற்றலை அதிகரிக்கும். அதேபோல், ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள் படிக்கும் முறையும், ஒரே நேரத்தில் இரு முதுகலை படிப்புகளை படிப்பதும், பொதுக்கல்வியில் இருந்து தொழிற்கல்விக்கும் தொழிற்கல்வியிலிருந்து பொதுக்கல்விக்கும் மாறுவதும் குழப்பத்தை ஏற்படுத்தும். இது நமது கல்விமுறையை சீர்குலைக்கும் முயற்சி.
விதிமுறைகளை ஏற்காவிட்டால் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். பல்கலைக்கழங்களால் வழங்கப்படும் பட்டங்கள் செல்லாது. யுஜிசி கூட்டங்களில் பங்கேற்க முடியாது என்றெல்லாம் மிரட்டல் விடுக்கின்றனர். இடஒதுக்கீடு, சமச்சீர் கல்வி என பல்வேறு புதிய முன்னெடுப்புகளில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருந்த மாநிலம் தமிழகம். அந்த வகையில் வரைவு அறிக்கையை திரும்பப்பெறும் விஷயத்திலும் தமிழகம் வழிகாட்டியாக இருக்கும்.
மாநிலங்களின் கல்வி உரிமையை பறிக்கும் யுஜிசி வரைவு அறிக்கையை திரும்பப் பெறக்கோரி தமிழக சட்டப்பேரவையிலும் கேரளாவிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தெலங்கானா முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் எதிர்ப்பு ஏற்பட்டிருப்பதால், யுஜிசி வரைவு அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
வரைவு அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க பிப்.5-ம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளனர். எனவே, யுஜிசி வரைவு அறிக்கையை திரும்பப் பெறக்கோரி மாணவர்களும், பெற்றோரும், கல்வியாளர்களும் draft-regulations@ugc.gov.in என்ற மின்னஞ்சலுக்கு தங்கள் கருத்தை அனுப்ப வேண்டும். யுஜிசி வரைவு அறிக்கையை திரும்பப்பெறும் வரை தமிழகம் தொடர்ந்து போராடும். இவ்வாறு அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.
யுஜிசி-க்கு மின்னஞ்சல் அனுப்ப முடிவு: யுஜிசி வெளியிட்டுள்ள வரைவு அறிக்கையை திரும்ப பெறக்கோரி பிப். 3 மற்றும் 4-ம் தேதி அரசு கல்லூரி ஆசிரியர்கள் அனைவரும் யுஜிசிக்கு மின்னஞ்சல் அனுப்ப உள்ளதாக தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக பொதுச்செயலாளர் சோ.சுரேஷ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment