Last Updated : 28 Jan, 2025 03:50 PM

2  

Published : 28 Jan 2025 03:50 PM
Last Updated : 28 Jan 2025 03:50 PM

108 ஆண்டாக இலவச ஆயுர்வேத மருத்துவ சேவை: மூலிகை தோட்டத்துக்கு நிலம் கிடைக்காமல் நாராயண குரு மடம் தவிப்பு

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் நாராயண குரு ஆசிரமம் மற்றும் அதனுடன் இணைந்த மருத்துவமனை. (உள்படம்) யோகனந்த தீர்த்தா

காஞ்சிபுரம் நாராயண குரு ஆசிரமத்தில் 1916-ம் ஆண்டு அமைக்கப்பட்ட மருத்துவமனை 108 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்து வருகிறது. இங்கு பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை, மருந்துக்கு மட்டும் கட்டணம் வாங்கப்படுகிறது.

காஞ்சிபுரம் ஆழ்வார் பங்களா அருகே செயல்பட்டு வருகிறது ஸ்ரீநாரயண குரு மடம். ஒரு மதம், ஒரே சாதி, ஒரே கடவுள் என்ற சித்தாந்தத்தை போதித்து கேரளம் உள்ளிட்ட பகுதிகளில் மடங்களை நிறுவினார் நாராயண குரு. இவரது சீடர் கோவிந்தானந்தாவை கடந்த 1914-ம் ஆண்டு காஞ்சிபுரத்துக்கு அனுப்பி வைத்தார்.

அப்போது முதல் உலகப் போர் நடைபெற்று வந்தது. காஞ்சிபுரத்தில் மக்கள் காலரா, பிளேக், தொழுநோய், காய்ச்சல், சொரி போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அப்போது உத்திரமேரூர் காடுகளுக்குச் சென்று மூலிகை பறித்து வந்து மக்களின் நோய்களை கோவிந்தானந்தா குணப்படுத்தினார். கீழ்சிவல்பட்டி சோமசுந்தர செட்டியார் கோவிந்தானந்தாவை பற்றி கேள்விப்பட்டு காஞ்சிபுரம் வந்தார்.

தனக்கு ஆண் வாரிசு இல்லை என்ற குறையை கூற 2 வாழைப் பழங்களை அவருக்கு கோவிந்தானந்தா பிரசாதமாக வழங்கியதாகவும், அதன்மூலம் அவருக்கு 2 ஆண் குழந்தைகள் பிறந்ததாகவும் இந்த மடத்தின் பக்தர்கள் கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து சோமசுந்தர செட்டியார் மடம் நிறுவ இடம் வாங்கி கொடுத்துள்ளார். அதன்மூலம் காஞ்சிபுரத்தில் நாராயண குரு மடத்தை நிறுவினார் கோவிந்தானந்தா. மடம் நிறுவப்பட்டபோதே அதனுடன் இணைந்து திறக்கப்பட்டது இந்த ஆயுர்வேத மருத்துவமனை.

இந்த மருத்துவமனை 108 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தற்போது யோகானந்த தீர்த்தா இந்த மடத்தையும் மருத்துவமனையையும் நடத்தி வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு சித்த மருத்துவமனையும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் கட்டணம் வசூலிப்பதில்லை. மருந்துக்கு மட்டும் பணம் வசூலிக்கப்படுகிறது. இந்த மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, பாடலாசிரியர் கண்ணதாசன், இந்திய பொருளாதார ஆலோசகராக இருந்த ரா.பி.சேதுபிள்ளை உள்ளிட்ட பிரபலங்கள் பலர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

நாராயண குரு ஆசிரம மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மறைந்த
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை. (கோப்புப்படம்)

பஞ்சகர்மா சிகிச்சை, ராஜவைத்தியம் முதலிய சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. தலைவலி, இருமல், சளி, சைனஸ் பிரச்சினை, இடுப்பு வலி, பக்கவாதம் உள்ளிட்ட வாதம் தொடர்பான நோய்கள் ஆகியவற்றுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.

இந்த மடத்தில் சுமார் 100 பேர் தங்கி சிகிச்சை பெறும் வகையில் விடுதிகள் உள்ளன. காஞ்சிபுரம் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் இங்கு பலர் சிகிச்சைக்கு வருகின்றனர். சிகிச்சைக்கு தேவையான மூலிகை தோட்டத்தை 2 ஏக்கர் பரப்பளவில் மேல்கதிர்பூர் பகுதியில் இந்த மடம் மூலம் நிறுவி பராமரித்து வருகின்றனர்.

இதுகுறித்து இந்த மடத்தின் தலைவர் யோகானந்த தீர்த்தா கூறும்போது, ‘மருத்து வம் பார்க்க பலர் வருகின்றனர். மூலிகைக்கு பற்றாக்குறை உள்ளது. கீழ்கதிர்பூரில் அரசு சார்பில் 2 ஏக்கர் நிலம் குத்தகைக்கு வழங்கப்பட்டது. அதில் மூலிகை பயிர் செய்து வந்தோம். தற்போது நீதிமன்றம் கட்டுவதற்காக அந்த இடம் தேவை என்று கூறிவிட்டனர்.

குத்தகை புதுப்பிக்கப்படவில்லை. அதனால் அங்கு மூலிகைத் தோட்டத்தை விரிவுபடுத்த முடியவில்லை. இந்த மூலிகைத் தோட்டத்தை விரிவுபடுத்த அரசிடம் இருந்தோ அல்லது சேவை உள்ளம் கொண்ட தனியாரிடம் இருந்தோ குறைந்த குத்தைகைக்கு நிலம் கிடத்தால் எங்கள் சேவை சிறப்பானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்’ என்றார்.

இதுகுறித்து இந்த மடத்தின் பக்தர்கள் கூறுகையில், ‘இந்த மடத்தின் சார்பில் மருத்துவமனை மட்டுமின்றி பள்ளிகள் நிறுவி கல்விச் சேவையும் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது. கோயில்கள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. மக்கள் சேவை அடிப் படையில் செயல்படும் இந்த மடத்துக்கு மூலிகை தோட்டம் அமைப்பதற்கான நிலத்தை அரசோ, தனியாரோ குறைந்த குத்தகைக்கு கொடுத்து உதவ வேண்டும்’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x