Published : 28 Jan 2025 06:16 AM
Last Updated : 28 Jan 2025 06:16 AM
சென்னை: உரிய நேரத்தில் ஆவணங்களை திரும்ப அளித்தல், பதிவு செய்தவுடன் உடனடியாக இணையவழி பட்டா மாறுதலுக்கு வழிவகை செய்வது உள்ளிட்டபணிகளை மேற்கொண்டு அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தர வேண்டும் என்று பதிவுத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் பி.மூர்த்தி அறிவுறுத்தினார்.
சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கில் 2024-25 ம் ஆண்டு டிசம்பர் மாததத்துக்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், தனித்துணை ஆட்சியர்கள் (முத்திரை) மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோருடனான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், பதிவுத்துறையில் 2024-25-ம் ஆண்டில் ஆவணங்களை பதிவு செய்து உரிய நபர்களுக்கு அன்றே திரும்ப வழங்குவதில் சிறப்பாக பணியாற்றிய சார்பதிவாளர்களுக்கு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.
கூட்டத்தில் அமைச்சர் பேசும்போது, ‘‘உரிய நேரத்தில் ஆவணங்களை திரும்ப அளித்தல், பதிவு செய்தவுடன் உடனடியாக இணையவழி பட்டா மாறுதலுக்கு வழிவகை செய்தல், நிலுவையிலுள்ள ஆவணங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தல், முன்பதிவு செய்யப்பட்ட டோக்கன்கள் அனைத்தும் அதே நாளில் பதிவுகள் மேற்கொள்வதை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளை உரிய நேரத்தில் திறம்பட மேற்கொண்டு அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தர ஒத்துழைக்க வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் பிரஜேந்திர நவ்நீத், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கூடுதல் பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் பதிவுத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment