Published : 28 Jan 2025 06:20 AM
Last Updated : 28 Jan 2025 06:20 AM

மாணவி வன்கொடுமை வழக்கில் எஃப்ஐஆர் கசிந்த விவகாரம்: காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை

புதுடெல்லி: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை கசிந்த விவகாரத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, இந்த வழக்கில் போலீஸார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) கசிந்து, பாதிக்கப்பட்ட மாணவியை பற்றிய அனைத்து விவரங்களுடன், எவ்வாறு சம்பவம் நடந்தது என்ற முழு தகவல்களும் வெளியாகின.

இதில் சிபிஐ விசாரணை கோரி வழக்கறிஞர்கள் வரலட்சுமி (அதிமுக), ஏற்காடு ஏ.மோகன்தாஸ் (பாஜக) ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமி நாராயணன் அமர்வு இந்த வழக்கை கடந்த டிசம்பர் 28-ம் தேதி விசாரித்து பிறப்பித்த உத்தரவு விவரம்:

வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், அரசின் அனுமதியின்றி செய்தியாளர் சந்திப்பு நடத்தியது ஏன்? பாதிக்கப்பட்டவரின் விவரங்கள் காக்கப்பட வேண்டிய நிலையில் பொதுவெளியில் எஃப்ஐஆர் கசிந்தது எப்படி? ஞானசேகரன் மட்டும்தான் குற்றவாளி என எந்த அடிப்படையில் முடிவுக்கு வந்தார்? இந்த விஷயத்தில் காவல் ஆணையர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவியின் தனிப்பட்ட தகவல்கள் வெளியானது துரதிர்ஷ்டவசமானது. படிப்பு முடியும் வரை அவரிடம் எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கப்படுகிறது. மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக தமிழக அரசு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். எஃப்ஐஆர் கசிய காரணமாக இருந்த அதிகாரிகளிடம் இருந்து இந்த தொகையை அரசு வசூலித்துக் கொள்ளலாம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இதில், சென்னை மாநகர காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக மட்டும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா அமர்வில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹ்தகி, சித்தார்த் லுத்ரா ஆகியோர், ‘‘இந்த விவகாரத்தில் நாங்கள் பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்புக்காகவே உள்ளோம்.

அவருக்கான அனைத்து உதவிகளையும் செய்வோம். தொழில்நுட்ப கோளாறு காரணமாக எதிர்பாராத வகையில் எஃப்ஐஆர் கசிந்துள்ளது. அது உடனடியாக தடுக்கப்பட்டுவிட்டது. இதற்காக, காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மட்டும் நீக்குமாறு கோருகிறோம்’’ என்றனர்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘பாதிக்கப்பட்ட மாணவியின் விவரம் எவ்வாறு பொதுவெளியில் வெளியானது? அந்த விவரங்களை பரப்பியவர்களை கண்டுபிடிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?’’ என்று கேள்வி எழுப்பினர். எஃப்ஐஆர் கசிந்த விவகாரத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தனர்.

‘‘பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்களை பொதுவெளியில் அடையாளப்படுத்துவது, அந்த பெண்ணுக்கும், அவரது குடும்பத்துக்கும் நிச்சயமாக மேலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். எனவே, சிறப்பு புலனாய்வு குழு தனது விசாரணையை தடையின்றி தொடரலாம்’’ என்று உத்தரவிட்டு, எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x