Published : 28 Jan 2025 06:10 AM
Last Updated : 28 Jan 2025 06:10 AM
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் பயன்படுத்திய வெடிகுண்டுகள் உயர் நீதிமன்ற வளாகத்துக்கு உள்ளே வந்து சென்றுள்ளதால், பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து நாளைக்குள் பரிந்துரைகளை அளிக்குமாறு தமிழக காவல் துறை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை மற்றும் வழக்கறிஞர் சங்கங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஜூலை 5-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதானவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் இந்த வழக்குகள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன் ஆஜராகி, ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் பயன்படுத்துவதற்காக கொலையாளிகள் வைத்திருந்த வெடிகுண்டுகள் உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி என்பது குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். அதை நீதிபதிகள் படித்துப் பார்த்தனர்.
இதைத் தொடர்ந்து நடந்த வாதம்:
நீதிபதிகள்: இந்த சம்பவத்தில் தொடர்பு உடைய வழக்கறிஞர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இந்த விவகாரத்துக்கு பிறகு உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் பாதுகாப்பை பலப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் குமரேசன்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள 6 வழக்கறிஞர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உயர் நீதிமன்றத்துக்குள் வருபவர்கள் முழுமையாக போலீஸாரால் சோதனையிடப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள்: அரசு தரப்பு கூறுவதுபோல உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் எந்த வெடிகுண்டும் கொண்டு வரப்படவில்லை. அது தவறான குற்றச்சாட்டு. இவ்வாறு வாதம் நடந்தது.
இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: உயர் நீதிமன்றத்துக்குள் கொண்டு வரப்பட்ட குண்டுகள் வெடித்திருந்தால் என்ன மாதிரி விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது.
இது அனைவரது பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. இதில் அலட்சியம் காட்ட கூடாது. உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் பாதுகாப்பை பலப்படுத்துவது முக்கியமானது என்பதால் இதுதொடர்பாக தமிழக காவல் துறை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) மற்றும் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களும் தங்களது பரிந்துரைகளை அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 29-ம் தேதிக்கு (நாளை) தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment