Published : 28 Jan 2025 06:35 AM
Last Updated : 28 Jan 2025 06:35 AM
சென்னை: நூறு நாள் வேலை திட்டத்துக்கு கடந்தாண்டு நவம்பர் முதல் விடுவிக்கப்படாத ரூ.1,635 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் வலியுறுத்தினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் எப்போதும் முன்னோடியாக இருந்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 85 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 1.09 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். 86 சதவீதம் வேலைவாய்ப்பு பெண் தொழிலாளர்களுக்கும், மொத்த வேலைவாய்ப்புகளில் 29 சதவீதம் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின குடும்பங்களுக்கும் வழங்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி தொழிலாளர்கள் இத்திட்டத்தின்கீழ் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 2024-25-ம் ஆண்டில் கடந்தாண்டு நவ.27-ம் தேதி முதல் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாத நிலையில், ஊதியத்துக்கான நிதியினை உடனடியாக விடுவிக்க கோரி கடந்த ஜன.13-ம் தேதி கடிதம் வாயிலாக பிரதமரை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
தற்போதுவரை நிதி விடுவிக்கப்படாத நிலையில், டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி எம்பி., கனிமொழி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் நேற்று சந்தித்தனர்.
அப்போது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கடந்தாண்டு நவம்பர் முதல், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவை தொகையான ரூ.1,635 கோடியை உடனே விடுவிக்க கோரியும், 2024-25-ம் ஆண்டுக்கு கூடுதல் மனித சக்தி நாட்களுக்கு ஒப்புதல் வழங்கவும் வலியுறுத்தினர். மேலும் தமிழகத்தில் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தொடர்ந்து ஆதரவு வழங்கக்கோரி கடிதக் குறிப்பு வழங்கினர். இச்சந்திப்பின்போது, மத்திய நிதி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் எஸ்.எஸ்.யாதவ் உடன் இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...