Published : 27 Jan 2025 07:36 PM
Last Updated : 27 Jan 2025 07:36 PM

“வேங்கைவயல் விவகாரத்தில் மறைக்க ஏதுமில்லை எனில்...” - தமிழக அரசுக்கு கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

கிருஷ்ணசாமி | கோப்புப்படம்

சென்னை: “வேங்கைவயல் விவகாரத்தில் மறைப்பதற்கு எதவும் இல்லை. யாரையும் பாதுகாக்க வேண்டிய அவசியல் இல்லை என தமிழக அரசு கருதுமேயானால் இவ்வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்” என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வாழும் பகுதியில் உள்ள குடிநீர் தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட நிகழ்வு நடந்து, இரண்டு வருடங்கள் நிறைவுற்று விட்டன. இச்சம்பவத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் வன்மையாகக் கண்டித்தன, குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிக்க வலியுறுத்தி பலரும் போராட்டம் நடந்தி விட்டனர்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வேங்கைவயல் கிராமத்தில் பலருக்கு டிஎன்ஏ சோதனைகளும் நடைபெற்றன. ஒரு நபர் நீதிபதி ஆணையம் அமைக்கப்பட்டது. வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. வேங்கைவயல் மனித உரிமை மீறலில் ஏன் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என பலதரப்பினரும் மீண்டும் மீண்டும் குரல் எழுப்பினர், அரசு மவுனம் சாதித்தது.

இந்நிலையில், திடீரென ஜன.24-ம் தேதி, அன்று புகார் அளித்த மூன்று பேர் குற்றவாளிகள் என குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது. இரண்டு வருடத்துக்கு மேலாக கண்டறியப்படாமல் நீடித்த இவ்வழக்கு இப்படி முடித்து வைக்கப்படும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை.

கடந்த ஒரு வருடத்தில் லட்சத்துக்கும் மேற்பட்ட மொபைல் போன்கள் ஆய்வு செய்யப்பட்டு அதில் திரட்டிய ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்து றை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதைப் பாதிக்கப்பட்ட தரப்பு மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அப்படியெனில் ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு மேலாக லட்சக்கணக்கான மொபைல் எண்கள் ஆய்வு செய்து கண்டறியப்பட்டது உட்பட அத்தனை விடயமும் பொய்யாகிவிடுமா என்று அரசுத் தரப்பும் ஆளும் கட்சிக்கு சொம்பு தூக்கும் கும்பலும் பிதற்றுகிறார்கள்.

1993-ல் சிதம்பரம் பத்மினி பாலியல் வன்கொடுமை வழக்கு முதல் எத்தனையோ பட்டியலின மக்களின் புகார்கள் இறுதியில் அவர்கள் மீதே திருப்பி விடப்பட்டுள்ளன. எனவே, நீண்டநாள் இழுபறிக்கு ஒரு முடிவுகட்ட காவல் துறை இதுபோன்ற ஒரு நிலைக்கு வந்துவிட்டதோ என்ற சந்தேகம் பொதுவெளியில் எழாமல் இல்லை.

தங்கள் மீது பழி சுமத்தப்பட்டதைக் கண்டித்து வேங்கைவயல் மக்கள் மீண்டும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்திப் போராடவும் தொடங்கியுள்ளனர். வேங்கைவயல் சம்பவத்தைப் பொறுத்தமட்டிலும், அது அப்பட்டமான மனித உரிமை மீறல். மாபெரும் குற்றம். உண்மை குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு. வேங்கைவயல் விவகாரத்தில் மறைப்பதற்கு எதவும் இல்லை. யாரையும் பாதுகாக்க வேண்டிய அவசியல் இல்லை என தமிழக அரசு கருதுமேயானால் இவ்வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT   ( 2 Comments )
  • S
    S. Chandran

    என்ன மாதிரி அரசியல்வாதி இவர் ? தன் இருப்பைக் காட்டிக்கொள்ள பலர் அறிக்கை வெளியிடுகின்றனர். அதில் இவரும் ஒருவர் .சி பி ஐ விசாரணை கோரும் அனைத்து அரசியல்வாதிகளும் சம்பவம் நடந்து 2 வருடங்களாக ஏன் மௌனம் சாதித்தனர் . இப்போது விசாரணை முடிவுகள் வெளி வந்தவுடன் ,அதை ஏற்றுக் கொள்ளும் மன நிலை இல்லாது தேவையற்ற சி பி ஐ விசாரணை கோருகின்றனர் . குற்றச் செயலில் ஈடுபடுவோர் எல்லா சமூகப் பிரிவுகளிலும் இருக்கத் தான் செய்கிறார்கள். ஆதலால் ஒவ்வொரு பிரிவினரும் அவ்வாறு கேட்க வேண்டுமா ? இவர்கள் நிறைய சிந்திக்க வேண்டும் . ஒரு பட்டியலினத்தவருக்கோ அல்லது அச் சமூகத் தினருக்கோ பாதிப்பு ஏற்படுத்தும் குற்றச் செயல் நடந்தால் ,அதை பட்டியலின அல்லாதோர் செய்திருப்பதாக பரவலாக நம்பப்படும் பொது புத்தியின் விளைவே இது.

  • C
    Chandra_USA

    << 1993-ல் சிதம்பரம் பத்மினி பாலியல் வன்கொடுமை வழக்கு முதல் எத்தனையோ பட்டியலின மக்களின் புகார்கள் இறுதியில் அவர்கள் மீதே திருப்பி விடப்பட்டுள்ளன >> திராவிட மாதிரி

 
x
News Hub
Icon