Last Updated : 27 Jan, 2025 07:03 PM

2  

Published : 27 Jan 2025 07:03 PM
Last Updated : 27 Jan 2025 07:03 PM

தமிழகத்தில் பொது இடங்கள், சாலைகளில் உள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை 12 வாரத்தில் அகற்ற ஐகோர்ட் உத்தரவு

மதுரை: ‘தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புக்கான இடங்களில் உள்ள நிரந்தர கொடிக் கம்பங்களை 12 வாரத்தில் அகற்ற வேண்டும்’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை விளாங்குடியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சித்தன், மாடக்குளம் கதிரவன் ஆகியோர் அதிமுக கொடிக் கம்பம் அமைக்க அனுமதி வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நீதிபதி இளந்திரையன் இன்று உத்தரவு பிறப்பித்தார்.

அதன் விவரம்: சாலைகளிலும், தெருக்களிலும் பொது இடத்தை ஆக்கிரமித்து கட்சிக் கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், சாலையை பயன்படுத்துவோருக்கு பல்வேறு சிரமங்களும் ஏற்படுகிறது. கட்சித் தலைவர்கள், சமுதாயத் தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாளின் போது கொடிக்கம்பம் அமைந்துள்ள பகுதி முழுவதுமாக ஆக்கிரமிக்கப்படுகிறது.

யார் எவ்வளவு உயரத்தில் கொடிக் கம்பங்கள் அமைப்பது என்பதில் அரசியல் கட்சிகளிடம் போட்டிகள் ஏற்படுகின்றன. பொது இடங்கள், உள்ளாட்சி இடங்கள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் நிரந்தரமாக கட்சிக் கொடிக் கம்பங்கள் அமைக்க எந்த சட்டத்திலும் அனுமதி, உரிமம் வழங்கவில்லை. நிரந்தரமாக கட்சிக் கொடிக் கம்பங்கள் அமைக்க தடையில்லா சான்றிதழ் வழங்க போலீஸாருக்கும், வருவாய்த் துறையினருக்கும் அதிகாரம் இல்லை.

எனவே, தமிழகத்தில் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சி, சமுதாய அமைப்புகளின் நிரந்தர கட்சிக் கொடி கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட கட்சிக்கு நோட்டீஸ் அளித்து அடுத்த 2 வாரங்களில் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும். இதற்கான செலவுகளை சம்பந்தப்பட்ட கட்சி அல்லது அமைப்பிடம் வசூலிக்க வேண்டும்.

அரசியல் கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் நிரந்தரமாக கட்சிக் கொடிக் கம்பங்கள் அமைக்க எந்த அதிகாரியும் அனுமதி வழங்கக் கூடாது. அரசியல் கட்சியினர், சமுதாயம் மற்றும் மத அமைப்புகளை சேர்ந்தவர்கள் முறையாக அனுமதி பெற்று அவர்களுக்கு சொந்தமான இடங்களில் கொடிக் கம்பங்களை வைக்கலாம். தமிழக அரசு தனியார் இடங்களில் கொடிக் கம்பங்கள் அமைப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும். பிரச்சாரம், பொதுக்கூட்டம், தர்ணா மற்றும் கூட்டங்களின் போது பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் தற்காலிகமாக கொடிக் கம்பங்கள் நடலாம். இதற்கு முன்கூட்டியே வாடகை வசூலித்துக்கொண்டு அதிகாரிகள் அனுமதி வழங்கலாம்.

அனுமதிக் காலம் முடிந்த பின்னர் தற்காலிகக் கொடிக் கம்பங்கள் அகற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். கொடிக் கம்பங்கள் நடப்பட்ட இடம் சுத்தம் செய்யப்பட்டு, அதற்காக தோண்டிய குழிகள் மூடப்பட்டு பழைய நிலைக்கு கொண்டு வரப்பட்டு இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும். இதில் பாதிப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அபராதம் வசூலிக்க வேண்டும்.

உயர் நீதிமன்ற பதிவுத்துறை இந்த உத்தரவு நகலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்ப வேண்டும். இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர், நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x