Published : 27 Jan 2025 04:40 PM
Last Updated : 27 Jan 2025 04:40 PM

“பெரியார் குறித்த சீமான் பேச்சுக்கு பதில் அளிக்க மாட்டோம்” - ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி திட்டவட்டம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தேர்தல் முடியும் வரை, பெரியார் குறித்து சீமான் பேசுவதற்கு பதில் அளிக்க மாட்டோம் என்று வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி ஈரோட்டில் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை ஆதரித்து, வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். ஈரோடு, வளையக்கார வீதி, வி.வி்.சி.ஆர், ஐயனரப்பன் கோவில் வீதி உள்பட பல்வேறு பகுதிகளில், வீடு வீடாகச் சென்று அமைச்சர் தலைமையில் திமுகவினர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அமைச்சர் முத்துசாமி தலைமையிலான திமுகவினர் வாக்கு சேகரிக்கச் சென்றபோது ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது, தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் துண்டறிக்கைகளை வழங்கி திமுகவினர் வாக்கு சேகரித்தனர். வாக்குச் சேகரிக்கச் சென்ற இடங்களில் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை, குடிநீர், சாக்கடை வசதி தேவை என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அமைச்சரிடம் அப்பகுதி வாக்காளர்கள் தெரிவித்தனர். தேர்தல் முடிந்த உடன் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

பிரச்சாரத்தின்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் முத்துசாமி கூறியது: “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு கேட்க வேண்டும் என்பதற்காக தான் வாகன பரப்புரை தவிர்த்து விட்டோம். இந்த சந்திப்பின்போது மகளிர் உரிமைத்தொகை போன்ற சில கோரிக்கைகளை வாக்காளர்கள் முன்வைக்கின்றனர். அதிக அமைச்சர்கள் பிரச்சாரத்திற்கு வந்தால் இத்தனை அமைச்சர்கள் ஏன் வந்தார்கள் என்று சொல்கிறீர்கள். யாரும் வரவில்லை என்றால், ஏன் வரவில்லை என்று கேள்வி எழுப்புகிறீர்கள்.

மற்ற அமைச்சர்கள் வர வேண்டியதில்லை, உள்ளூரில் உள்ளவர்கள் பிரச்சாரம் செய்யட்டும் என தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தை உள்ளூர் அமைச்சரான நான் மேற்கொண்டு வருகிறேன். தமிழக அரசின் திட்டங்களால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதால் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வெற்றி பெறுவோம் என நம்புகிறோம்.

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்களில் விடுபட்டவர்களுக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் ஏற்கெனவே அறிவித்துள்ளனர். அவர்கள் அளித்துள்ள உறுதிமொழி குறித்த செய்தியை துண்டு பிரசுரமாக வாக்காளர்களிடம் விநியோகித்து வருகிறோம். பெரியார் குறித்து சீமான் பேசுவதற்கு தேர்தல் முடியும் வரை பதில் அளிக்க மாட்டோம். பெரியார் எதில் எல்லாம் வழிகாட்டியாக இருந்தார் என உலகிற்கே தெரியும்'' என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x