Published : 27 Jan 2025 08:13 AM
Last Updated : 27 Jan 2025 08:13 AM
கள்ளக்குறிச்சி: தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தின்போது உயிரிழப்புகளைத் தவிர்க்க, மூங்கில் கழியால் உருவாக்கப்படும் சாலையோரத் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகும்போது உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் நேரிடுகின்றன. வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாவது மட்டுமின்றி, சாலையோரத்தில் உள்ள இரும்பு தடுப்பில் மோதி யும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.
மேலும், சில நேரங்களில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தும், வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன. இதுபோன்ற விபத்துகளின் போது உயிரிழப்புகளைத் தடுப்பது குறித்து நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மூங்கிலான தடுப்புகளை அமைத்து, விபத்தின்போது உயிரிழப்பைத் தடுக்க முடிவெடுக்கப்பட்டது. அந்த வகையில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மூங்கில் கழி சாலையோர தடுப்பு.
அந்த வகையில் விபத்துகள் அதிகம் நேரிடும் உளுந்தூர்பேட்டை - பெரம்பலூர் இடையே மூங்கில் தடுப்புகளை அமைத்து வருகின்றனர். மூங்கில் கழிகளில் தார் பூசி, அதன் மீது மின்னொளி பிரதிபலிப்பானை அமைத்து, இந்த தடுப்புகளை அமைத்து வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் தடுப்புகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோர் கூறியதாவது: இதுபோன்ற மூங்கில் தடுப்புகள் டெல்லியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் இந்த முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மூங்கில் தடுப்பில் மோதினால், மோதிய வேகத்தில் வாகனங்கள் பின்னோக்கியே செல்லும் இதனால் வாகனம் சேதமடைந்தாலும், உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க முடியும் விபத்தின் பாதிப்பை வெகுவாக குறைக்க முடியும் தார் பூசிய மூங்கிலின் மீது வெள்ளை நிறப் பிரதிபலிப்பான் ஒட்டுவதால் . இரவு நேரத்தில் தடுப்பு 'பளிச்' எனத் தெரியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். உளுந்தூர்பேட்டை பகுதியைத் தொடர்ந்து, அனைத்து இடங்களிலும் மூங்கில் தடுப்பு களை அமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...